மோடியும் ஸ்டாலினும் நேருக்குநேர் சந்திக்கும் அடுத்த மேடை!

Published On:

| By Prakash

ஜூலை 29ம் தேதி நடைபெற இருக்கும் அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் மீண்டும் மோடியும் ஸ்டாலினும் நேருக்குநேர் சந்திக்க இருப்பது எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

2021ம் ஆண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, பிஹெச்டி பட்டங்கள் முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளது. இதனால், வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள் சான்றிதழ்களைப் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் பட்டமளிப்பு விழாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளிக்காததால்தான் தள்ளிப்போவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் ஜூலை 28ம் தேதி நடைபெற இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி தமிழகம் வர இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, அதற்கு மறுநாள் (ஜூலை 29) அண்ணா பல்கலைக்கழகத்தின் 42வது பட்டமளிப்பு விழா, சென்னை விவேகானந்தர் அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பட்டங்களை வழங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடியுடன், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.

ஏற்கெனவே திமுக அமைச்சர்களுக்கும், ஆளுநருக்கும் இடையே வார்த்தைப் போர் நடைபெற்று வருகிறது. அது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பெரிதாக வெளிப்பட்டது. இந்த விழாவைப் புறக்கணித்த அமைச்சர் பொன்முடி, ‘பல்கலைக்கழக உள்விவகாரங்களில் ஆளுநர் தலையிடுவது தவறானது. மாணவர்களிடையே ஆளுநர் அரசியலை புகுத்துகிறார்’ என ஆளுநர் மீது குற்றச்சாட்டை வைத்தார், அமைச்சர். தவிர, மத்திய இணை அமைச்சர் முருகன் இந்த விழாவுக்கு வந்ததும் பெரிய பிரச்சினையைக் கிளப்பியது. இதற்கும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார், மாநில பிஜேபி தலைவர் அண்ணாமலை.

அதுபோல் இந்த ஆண்டு மே 26ம் தேதி மத்திய, மாநில அரசு துறைகளின் சார்பில் ரூ.31,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஒன்றிய அரசு என்பதை அழுத்தத்துடன் பதிவு செய்ததுடன் நீட், ஜிஎஸ்டி, தமிழ் அலுவல் மொழி மற்றும் கச்சத்தீவு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேசினார். பிரதமர் முன்னிலையில் பேசிய முதல்வர் ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருந்தார். அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அரசியல் பேசியதாக அவர் சாடினார்.

இப்படியாக திமுவுக்கும் பாஜகவுக்கும் ஏழாம்பொருத்தமாக இருக்கும்நிலையில், அண்ணா பல்கலையில் நடைபெற இருக்கும் பட்டமளிப்பு விழாவில் மீண்டும் மோடியும் ஸ்டாலினும் நேருக்குநேர் ஒரே மேடையில் மீண்டும் சந்திக்க இருப்பதால், அரசியல் களத்தின் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.


ஜெ.பிரகாஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share