பிரதமர் என்றால் அண்ணன்: தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

Published On:

| By Aara

பிரதமர் மோடியை ‘அண்ணன்’ என்று அழைத்த தெலங்கானா காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் அணுகுமுறை இன்று (மார்ச் 4) இந்திய அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இன்று மாலை சென்னை வந்திருக்கும் பிரதமர் மோடி, முன்னதாக இன்று காலை தெலங்கானா மாநிலத்தில் அரசு விழாவுக்கும், அரசியல் நிகழ்வுக்கும் சென்றிருந்தார்.

தெலங்கானாவின் அடிலாபாத் மற்றும் சங்கரெட்டி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி, பெத்தபள்ளியில் உள்ள தெலுங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 800 மெகாவாட் (யூனிட்-2) திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அம்பாரி-அடிலாபாத்-பிம்பல்குடி மின்மயமாக்கல் திட்டம்; 7,000 கோடி மதிப்பிலான ரயில்வே, நெடுஞ்சாலை மற்றும் மின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

தெலங்கானா மாநிலத்தில் சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில், காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றி பெற்று ரேவந்த் ரெட்டி முதல்வரானார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததன் பிறகு பிரதமர் மோடி இன்றுதான் முதல் முறையாக தெலங்கானா செல்கிறார்.

ஏற்கனவே கே.சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோது பிரதமர், ஆளுநர் கலந்துகொள்ளும் அத்தனை நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.

ஆனால் இன்று அரசு விழாவில் பிரதமர் மோடியோடு பங்கேற்ற முதல்வர் ரேவந்த் ரெட்டி மோடியை அண்ணன் என்று அழைத்துள்ளார்.

 

Image

இன்று நடந்த அரசு விழாவில் பேசிய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, “எங்களைப் பொறுத்தவரை பிரதமர் என்றால் படா பாய் அதாவது மூத்த சகோதரர் என்றுதான் அர்த்தம்.

பிரதமரது உதவியால்தான் முதல்வர்கள் தங்கள் மாநிலங்களை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும். தெலங்கானா குஜராத்தைப் போல முன்னேற வேண்டுமானால், உங்கள் உதவி தேவை என்பது எனது வேண்டுகோள்.

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற உங்கள் இலக்கை அடைய, இந்தியாவுக்கு ஐந்து பெருநகரங்கள் தேவை. அதில் ஹைதராபாத்தும் பங்களிக்க விரும்புகிறது. தயவு செய்து மெட்ரோ ரயில் திட்டத்தில் எங்களை ஆதரிக்க வேண்டும்.

நீங்கள் சபர்மதி நதியை உருவாக்கியது போல், நாங்கள் எங்கள் மூசி நதியை மீண்டும் உருவாக்க விரும்புகிறோம். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், மத்திய அரசுடன் சண்டையிட விரும்பவில்லை” என்று ரேவந்த் ரெட்டி பேசினார்.

இந்த நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, “சில அரசியல் கட்சிகள் பல வளர்ச்சித் திட்டங்களுக்கான தனது தொடக்க நிகழ்வுகளை தேர்தல் சார்ந்ததாக வகைப்படுத்துகின்றன. அதனால் புறக்கணிக்கிறார்கள். இது வருத்தமாக உள்ளது. தேர்தல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படாத நிலையில், இதுபோன்ற அனுமானங்களைச் செய்வது நியாயமில்லை” என்று கூறினார்.

சமீபத்தில் பிப்ரவரி 28 ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல… தென்னிந்திய மாநிலங்கள் மோடி ஆட்சியில் வஞ்சிக்கப்படுகின்றன என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடக முதல்வர் சித்தாராமையா போன்றோர் கூறி வரும் நிலையில்… தெலங்கானா மாநில காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி, ‘பிரதமர் உதவி இல்லாமல் முதல்வர்கள் தங்கள் மாநிலங்களை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாது’ என்று கூறியிருப்பது கவனிக்கத் தக்கதாக அமைந்துள்ளது.

ரேவந்த் ரெட்டியின் இந்த அணுகுமுறை குறித்து சமூக தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வரும் நிலையில் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசியலில் எவ்வித சமரசமும் இல்லை. நிர்வாகத்தில் எவ்வித குழப்பமும் இல்லை” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனும் கலந்துகொண்டார்.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ED ரெய்டா? – நவீன் பில்டர்ஸ் மறுப்பு!

கலைஞர் அருங்காட்சியகம் : அனுமதிச் சீட்டு பெறுவது எப்படி?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment