நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 12 ஆண்டுகளாக புகார் கூறி வருகிறார்.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.
இந்தசூழலில் விஜயலட்சுமியின் புகாரின் அடிப்படையில் சீமான் செப்டம்பர் 9 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று வளசரவாக்கம் காவல் நிலையம் சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால் கட்சி பணிகள் இருப்பதாக கூறி வேறோரு நாளில் ஆஜராவதாகத் தெரிவித்திருந்தார் சீமான். அதன்படி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு ஆஜராகவுள்ளார்.
இந்நிலையில் சீமான் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் ஏற்கனவே சீமான் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா