அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இன்று (டிசம்பர் 21) எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டி உள்ளார்.
கூட்டத்தில் பன்னீர்செல்வம் நியமித்த 88 மாவட்ட செயலாளர்கள் 100க்கும் மேற்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் என சுமார் 250 பேர் கலந்து கொண்டுள்ளார்கள்.
காலை 10 மணிக்கு என அறிவிக்கப்பட்டிருந்த கூட்டம் தொடங்குவதற்கு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது.
இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் பொதுக்குழு கூட்டப்படும் என்று தெரிகிறது.
அதிமுகவின் சட்ட திட்ட விதிகளின்படி அவைத்தலைவர் இல்லாமல் பொதுக்குழு உள்ளிட்ட எந்த கூட்டமும் கூட்ட முடியாது.
இதை உணர்ந்து தான் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என்று பன்னீர்செல்வத்தின் ஒப்புதலின் பேரில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக பண்ருட்டி ராமச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும், அவர் தலைமையிலேயே பன்னீர் கூட்டும் பொதுக்குழு நடைபெறும் என்றும் தெரிவிக்கிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள்.
இது உட்பட மேலும் பல முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். எடப்பாடி அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
–வேந்தன்