பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று (ஆகஸ்ட் 5) குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு தமிழகம் வருகிறார்.
டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மைசூரு வரும் குடியரசுத் தலைவர் முர்மு, அங்கிருந்து சாலை மார்க்கமாக தமிழ்நாட்டில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்கிறார். அங்கு “தி எலிபன்ட் விஸ்பரஸ்” ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் விருதை வென்ற தம்பதிகளான பொம்மன், பெள்ளி குடியிருக்கும் பகுதிக்கு செல்வதோடு யானைகள் முகாமையும் பார்வையிடுகிறார்.
மீண்டும் மைசூரு விமான நிலையம் செல்லும் அவர், இன்று மாலை 6.30 மணி அளவில் சென்னை வந்தடைகிறார்.
விமான நிலையத்தில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்கிறார். அவருடன் ஆளுநர் ஆர்.என்.ரவியும் இருப்பார்.
இன்று இரவு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கும் திரௌபதி முர்மு, நாளை (ஆகஸ்ட் 6) காலை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். இந்த விழாவிலும் முதலமைச்சர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.
நாளை மாலை, ஆளுநர் மாளிகையில் மகாகவி சுப்ரமணிய பாரதியார் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட தர்பார் ஹாலை திறந்து வைத்து பாரதியார் புகைப்படத்தையும் திறந்து வைக்கிறார்.
அப்போது குடியரசு தலைவருக்கு ஆளுநர் ரவி அளிக்கும் விருந்தில் முதலமைச்சர் பங்கேற்க உள்ளார். நிகழ்ச்சியை முடித்துவிட்டு இரவு ஆளுநர் மாளிகையில் தங்கும் திரௌபதி முர்மு, திங்கட்கிழமை காலை ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார்.
முன்னதாக, திரவுபதி முர்மு குடியரசுத்தலைவர் ஆன பின்னர் சென்னை வர இருப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
அமெரிக்க டைம் ஸ்கொயரில் ’ஜெயிலர்’: ரசிகர்கள் கொண்டாட்டம்!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
ஹாக்கி: இந்தியா, ஜப்பான் இடையிலான ஆட்டம் டிரா!