”இந்தியாவை உலகளாவிய கண்டுபிடிப்பு சக்தியாக மாற்றுவதே இலக்கு” என நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார். President’s speech in Parliament
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நாளை 8வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அதனை முன்னிட்டு மரபுப்படி குடியரசுத்தலைவர் உரையுடன் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 31) தொடங்கியது.
டெல்லியில் தனது மாளிகையில் இருந்து குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் நாடாளுமன்றம் வந்த குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, துணை குடியரசுத்தலைவரும், மாநிலங்களவை சபாநாயகருமான ஜெக்தீப் தங்கர் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து நாடாளுமன்ற அவைக்கு வந்த ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரைக்கு முன்னதாக, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் தனது உரையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.
அவர் உரையின் முக்கிய பகுதிகள் இங்கே..
”இரண்டு மாதங்களுக்கு முன்பு, நமது அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டதன் 75 ஆண்டுகளைக் கொண்டாடினோம், சில நாட்களுக்கு முன்பு, 75 ஆண்டு பயணத்தை நிறைவு செய்தோம்.
இந்த நேரத்தில் அனைத்து இந்தியர்களின் சார்பாக, பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் அரசியலமைப்பு குழுவில் இடம்பெற்ற அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன்.
அரசு திட்டங்களின் உதவியுடன், நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மற்றும் வக்ஃப் திருத்த மசோதாவை நோக்கி அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசு மிக வேகமாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஏழைகள் நாட்டில் இப்போது கண்ணியத்துடன் வாழலாம். இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் உள்ளது.
நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் சொந்த வீடு வைத்திருக்கும் கனவை நிறைவேற்ற அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க மகாகும்ப மேளா தற்போது விமரிசையாக நடந்து வருகிறது. இது நமது கலாச்சார மரபுகள் மற்றும் சமூக விழிப்புணர்வின் திருவிழா. இந்தியா மற்றும் உலகத்தைச் சேர்ந்த அ பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடியுள்ளனர்.
மௌனி அமாவாசை அன்று நடந்த விபத்துக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. லக்பதி திதி யோஜனா திட்டத்தின் மூலம், சுயஉதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்களுக்கு நிலையான வாழ்வாதாரத்தை உருவாக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
இன்று அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போர் விமானங்களை ஓட்டுவது, காவல்துறையில் சேருவது மற்றும் நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது என்பது நாடாளுமன்றத்திற்கு மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம்.
நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்.
இன்று நமது இளைஞர்கள் தொடக்க நிறுவனங்கள் முதல் விளையாட்டு வரை விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில், இந்திய AI மிஷன் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவை உலகளாவிய கண்டுபிடிப்பு சக்தியாக மாற்றுவதே எங்கள் நோக்கம்.
இன்று, டிஜிட்டல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா ஒரு முக்கிய உலகளாவிய வீரராக தனது இருப்பை உணர வைக்கிறது… உலகின் வளர்ந்த நாடுகளும் இந்தியாவின் UPI பரிவர்த்தனை அமைப்பின் வெற்றியால் ஈர்க்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான ஒரு கருவியாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது.
-உதம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா ரயில் இணைப்புத் திட்டம் நிறைவடைந்துள்ளது, இப்போது நாடு காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டுள்ளது.
-சைபர் பாதுகாப்பில் செயல்திறனை உறுதி செய்வதில்அரசாங்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. டிஜிட்டல் மோசடி, சைபர் கிரைம் மற்றும் டீப்ஃபேக் ஆகியவை சமூக, நிதி மற்றும் தேசிய பாதுகாப்புக்கு கடுமையான சவால்களாக உள்ளன.
‘இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவது மட்டுமே நம் குறிக்கோள்” என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது உரையில் தெரிவித்துள்ளார்.