குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமித்து இன்று (ஜுலை 28) உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களின் பொறுப்பை சில ஆளுநர்கள் கவனித்து வந்ததாலும், தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில ஆளுநர்களின் பதவி காலம் முடிவுக்கு வருவதாலும் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு ஆளுநர்கள் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் பாஜக மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்த நிலையில் இன்று 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களும், 3 மாநிலங்களுக்கு ஆளுநர்களை மாற்றியும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நியமித்துள்ளார்.
அதன்படி தேர்தலுக்கு முன்பாகவே தான் ஓய்வு பெறுவதாக அறிவித்த பஞ்சாப் ஆளுநரும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியுமான பன்வாரிலால் புரோஹித்தின் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.
அதன்படி பஞ்சாப் மாநில ஆளுநராக மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாக, குலாப் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவர்அசாம் ஆளுநராக இருந்தார்.
மகாராஷ்டிரா ஆளுநராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜார்கண்ட், தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பதவி வகித்து வந்தார்.
அசாம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள லக்ஷ்மன் பிரசாத் ஆச்சாரியாவுக்கு, மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 6 புதிய ஆளுநர்கள் நியமனம்!
ராஜஸ்தானின் ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும்,
தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும்,
சிக்கிம் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூரும்,
ஜார்கண்ட் ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார்வும்,
மேகாலயா ஆளுநராக சிஎச் விஜயசங்கரும்
புதுவை துணை நிலை ஆளுநராக கைலாசநாதனையும் நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் ‘இந்த நியமனங்கள் அனைத்தும், புதிய ஆளுநர்கள் அந்தந்த அலுவலகங்களில் பொறுப்பேற்கும் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
IND vs SL: வெற்றியுடன் பயணத்தை துவங்கிய கவுதம் கம்பீர் – சூர்யகுமார் யாதவ்
பாம்பன் பாலப்பணிகள் நிறைவு: ரயில் போக்குவரத்து எப்போது?
அப்ப நம்ம தமிழிசை அக்காவை டீல்ல விட்டுட்டாங்களா, ஆளுனர் பதவியை விட்டுட்டு, தெருத் தெருவா அலஞ்சாங்களே, பாவம்.