குடியரசுத் தலைவர் நேற்று ஆற்றிய உரை மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. உண்மைக்கு மாறான விவரங்களைக் கூறி மக்களை ஏமாற்றும் பாஜக அரசுக்கு நற்சான்று வழங்குவதாகவும், தேர்தல் காலத்துப் பரப்புரையாகவும் குடியரசுத் தலைவர் உரை அமைந்திருக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 31) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அப்போது அவர், “கொரோனா காலத்தில் அரசு சிறப்பாக செயல்பட்டது. சட்டப்பிரிவு 370 நீக்கம் முதல் முத்தலாக் தடை வரை மத்திய அரசு தீர்க்கமான முடிவுகளை எடுத்திருக்கிறது” என்று கூறினார்.
இதுதொடர்பாக விசிக தலைவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. விலைவாசி ஏற்றமும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துள்ளன.
கிராமப்புறங்களில் வறுமை தாண்டவம் ஆடுகிறது. மோடி அரசு தனது கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு எப்படி பொது வளங்களையெல்லாம் தாரை வார்க்கிறது என்பதை உலகே அறியும்.
அவரது முதன்மைக் கூட்டாளியான அதானியின் மோசடிகள் வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்தப்பட்டு அதன் காரணமாக அவரது நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா , எல்.ஐ.சி முதலான பொதுத்துறை நிறுவனங்கள் கடுமையான நட்டத்தை சந்தித்துள்ளன.
இந்திய பங்கு சந்தை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதானியின் நிறுவனங்களுடைய பங்குகள் 5 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அதனால் கோடிக்கணக்கான முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
கொரோனா பெருந்தொற்றை இந்த அரசு சிறப்பாக கையாண்டதென குடியரசுத் தலைவர் கூறியுள்ளார். ”கொரோனாவில் நேரிட்ட 90% உயிரிழப்பை இந்திய அரசு வெளியே சொல்லாமல் மறைத்துவிட்டது.
கொரோனாவால் 47 லட்சம் இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்” என உலக சுகாதார நிறுவனம் ( WHO ) அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி பார்த்தால் உலகத்திலேயே அதிக உயிரிழப்பு இந்தியாவில்தான் ஏற்பட்டுள்ளது. இந்த உண்மை குடியரசுத் தலைவருக்குத் தெரியாதா?,
மோடி அரசின் அடக்குமுறைகள் காரணமாக கருத்து சுதந்திரம் மிக மோசமாக பறிக்கப்பட்டிருக்கிறது. பிபிசி ஆவணப் படத்தைப் பார்த்தார்கள் என்பதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இத்தகைய அடக்குமுறை நிலை உலகில் வேறு எங்குமே கிடையாது.
நிலைமை இப்படி இருக்கும் போது இந்தியாவில் பாலாறும் தேனாறும் ஓடுவது போல ஒரு சித்திரிப்பைக் குடியரசுத் தலைவர் முன் வைத்திருக்கிறார்.
தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் பாஜக வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது சட்டபூர்வமாக செய்யப்படும் மிகப்பெரிய ஊழல் என்று எல்லோருமே குற்றம் சாட்டுகிறார்கள், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழல் குறித்துப் பேசி இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தல் பத்திரங்கள் என்னும் சட்டபூர்வ ஊழல் குறித்து எதுவும் பேசவில்லை.

சீன ராணுவம் இந்திய கட்டுப்பாட்டில் இருந்த பல கிராமங்களை ஆக்கிரமித்து இருக்கிறது என்றும், அங்கே தனது ராணுவக் கட்டமைப்புகளை ஏற்படுத்தி உள்ளது என்றும் சாட்டிலைட் படங்கள் உள்ளிட்ட ஆதாரங்களோடு அமெரிக்கா வெளியிட்டிருக்கிறது.
சீன ஆக்கிரமிப்பு பற்றி பிரதமரோ, பாதுகாப்பு அமைச்சரோ பேச மறுக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினாலும் ராணுவ ரகசியம் என்று பதில் சொல்ல மறுக்கிறார்கள். அண்மையில் நமது வெளியுறவுத்துறை அமைச்சர், ’தற்போது செய்யப்பட்டு இருக்கும் சீன ஆக்கிரமிப்பை 60 ஆண்டுகளுக்கு முன்னர் செய்யப்பட்டதாக ஒரு புது விளக்கத்தை தந்திருக்கிறார்.
அதன் மூலம் சீனாவின் ஆக்கிரமிப்பை மூடிமறைத்து அவர் நியாயப்படுத்தி இருக்கிறார். இது அப்பட்டமான தேச விரோதச் செயலாகும். நமது நாட்டுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்தாத, அதை எதிர்த்து எதுவும் செய்யாத இந்த அரசு எல்லைப் பகுதியை சிறப்பாக பாதுகாக்கிறது என்று குடியரசுத் தலைவர் சான்றிதழ் வழங்கி இருப்பது மிகப்பெரிய நகைச்சுவையே ஆகும்.
பாஜக ஆட்சியில் மக்கள் மீதும் சிறுபான்மை மதங்களைச் சார்ந்தவர்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. தலைநகர் டெல்லியிலேயே பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழல் உள்ளது. இதையெல்லாம் மறைத்துவிட்டு இந்த அரசு நலிந்த பிரிவினருக்காகவும் பெண்களுக்காகவும் பாடுபடுகிற அரசு என்று குடியரசுத் தலைவர் பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
உண்மைக்கு மாறான தகவல்களை மக்களிடம் சொல்லி அவர்களை இந்த அரசு ஏய்ப்பதற்கு குடியரசுத் தலைவர் தனது உரை மூலம் நற்சான்று வழங்கியிருக்கிறார். நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்குமுன் ஆற்றப்பட்ட குடியரசுத் தலைவரின் இந்த உரை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் உரையாக இல்லை. மாறாக பாஜக அரசின் பரப்புரையாகவே உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!
வேலூரில் இன்று கள ஆய்வை துவங்கும் முதல்வர்!
கொலை முயற்சி வழக்கில் அமைச்சர் விடுவிப்பு!