காங்கிரஸ் திட்டம் முறியடிப்பு… மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்!

Published On:

| By christopher

president rule in manipur

மணிப்பூர் சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர காங்கிரஸ் தயாராக இருந்த நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று (பிப்ரவரி 13) முதல் அமலுக்கு வந்துள்ளது. president rule in manipur

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினர் இடையே மோதல் உருவானது.

பின்னர் அது கலவரமாக வெடித்த நிலையில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்த நிலையில், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இரு பெண்கள் ஆடைகளை களைந்து, சாலையில் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

21 மாதங்கள் கடந்த நிலையில் தற்போது வரை மணிப்பூரில் இருதரப்புக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் முதல்வர் பிரேன் சிங் கடந்த 9ஆம் தேதி காலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பின்னர் அன்று மாலையே இம்பாலில் உள்ள மணிப்பூர் மாநில ஆளுநர் அஜய் குமார் பல்லாவை நேரில் சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதனையடுத்து மணிப்பூரில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவாரா அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருமா என கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரைத்தார். அதனை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்ற நிலையில், பிரேன் சிங் ராஜினாமா செய்து நான்கு நாட்களுக்கு பிறகு அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

சட்டப்பேரவையை கூட்டினால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் கொண்டுவர தயாராக இருந்த நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்துறை அமைச்சகம் அறிவிப்பு! president rule in manipur

 president rule in manipur

இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “மணிப்பூர் மாநில ஆளுநரிடமிருந்து அறிக்கையைப் பெற்றுள்ள நிலையில், அந்த அறிக்கை மற்றும் எனக்குக் (ஜனாதிபதி திரெளபதி முர்மு) கிடைத்த பிற தகவல்களைப் பரிசீலித்த பிறகு, இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி அந்த மாநில அரசாங்கத்தை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என கருதுகிறேன்.

எனவே, இப்போது ​​அரசியலமைப்பின் பிரிவு 356 ஆல் வழங்கப்பட்ட அதிகாரங்களையும், அதற்காக எனக்கு உதவும் மற்ற அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தி, மணிப்பூர் மாநில அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும், அந்த மாநில ஆளுநருக்கு வழங்கப்பட்ட அல்லது செயல்படுத்தக்கூடிய அனைத்து அதிகாரங்களையும் இந்திய ஜனாதிபதியாக நானே ஏற்றுக்கொள்கிறேன்.

அந்த மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்கள் பாராளுமன்றத்தின் அதிகாரத்தால் அல்லது அதன் கீழ் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கிறேன்” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share