தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா குறித்த கேள்விக்கு குடியரசுத் தலைவர் பதிலளித்துள்ளதாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் இன்று (மார்ச் 14) தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவக் கல்வியில் சேர்வதற்கு பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வை மத்திய பாஜக அரசு கடந்த 2016ம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாட்டில் ஓராண்டு கழித்து 2017-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
எனினும் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராகச் சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றிய அதிமுக அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அந்த மசோதா ரத்து செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு தலைமையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் ஒருமனதாக செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா நீண்ட தாமதத்துக்குப் பிறகு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு மே மாதம் அனுப்பப்பட்டது. ஆனால், மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் வழங்கப்படவில்லை.
இதனையடுத்து தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதம் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக தான் அனுப்பிய கடிதத்திற்கு குடியரசுத்தலைவர் பதில் அளித்துள்ளதாக அவர் இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சு. வெங்கடேசன் எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக் கோரி நான் எழுதிய கடிதத்திற்கு, உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் இன்று பதிலளித்துள்ளார்.
அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனிதாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். தமிழகத்தின் கனவு அனிதாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கழிப்பறை இருக்கையை விட அதிகம்: தண்ணீர் பாட்டிலில் ஒளிந்திருக்கும் ஆபத்து!
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அமளி: நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!