நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு வரும் 25 ஆம் தேதி பதவியேற்க இருக்கும் நிலையில்… இன்று ( ஜூலை 23 ) தற்போதைய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு பிரிவு உபசார விழா நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ராம்நாத் கோவிந்த் குடியரசு தலைவராக இறுதி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ராம் நாத் கோவிந்த், “அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் மதிப்பை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். தங்கள் இலக்குகளை அடைவதற்கு அரசுக்கு எதிர்ப்பையும், அழுத்தத்தையும் உருவாக்குவதற்கும் போராடுவதற்கும் மக்களுக்கு உரிமை உண்டு. ஆனால், அது காந்திய வழிமுறைகளை பின்பற்றிதான் இருக்க வேண்டும்.
அதேபோல் அரசியல் கட்சிகள் பாகுபாடு அரசியலுக்கு அப்பாற்பட்டு தேசிய நலனை மட்டும் கருத்தில் கொண்டு மக்கள் நலனுக்கு என்ன தேவை என்பதை முடிவு செய்ய வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய குடும்பத்திற்குள் நான் ஒரு பகுதியாக இருக்கிறேன். மற்ற குடும்பங்களில் இருப்பது போல இந்த குடும்பத்திலும் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால், வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு மக்களின் நலனுக்காக எப்போதும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்று தன் உரையில் குறிப்பிட்டார் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்.
குடியரசுத் தலைவராக பணியாற்ற வாய்ப்பளித்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன் என்றும் தன் உரையில் நெகிழ்ச்சியோடு கூறினார் ராம் நாத் கோவிந்த்.
மோனிஷா