குடியரசுத் தலைவரின் திருவாரூர் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக 4 நாள் பயணமாக நேற்று முன்தினம் (நவம்பர் 27) தமிழகம் வந்தார்.
உதகையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.
இன்று (நவம்பர் 29) குன்னூர், வெலிங்டன் பகுதியில் உள்ள முப்படை அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.
அப்போது, கடற்படை, ராணுவப்படை,விமானப்படை என முப்படைகளிலும் பெண்கள் சாதித்து வருவதை சுட்டிக்காட்டி பெருமிதம் தெரிவித்தார்.
இன்னும் பல பெண்கள் முப்படைகளில் இணைவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி, இந்தியா மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறையில் திறமையான அதிகாரிகளை உருவாக்கியிருக்கிறது.
70 ஆண்டுகளாக இக்கல்லூரி நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மயத்துடன் செயல்பட்டு வருவது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூறினார்.
இன்று ஊட்டியில் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நாளை திருவாரூர் செல்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நாளை மாலை 3 மணிக்கு பட்டமளிப்பு விழா நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு குடியரசுத் தலைவர் பட்டங்களை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக குடியரசுத் தலைவரின் திருவாரூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
இதன்காரணமாக கடந்த 2 நாட்களாக திருவாரூரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கிருந்து அனுப்பப்பட்டனர்.
பட்டமளிப்பு விழவில், வேந்தர் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
இத இப்பதான் செய்யனுமா? : அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அதானியுடன் சந்திப்பா? சட்டமன்றத்தில் புயல்… பதிலடிக்குத் தயாராகும் ஸ்டாலின்