இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என பெயர் மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் மாளிகையே பயன்படுத்தியிருப்பது நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஜி 20 உச்சி மாநாட்டை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற டின்னருக்கான அழைப்பிதழ் எம்.பி.க்கள் உட்பட பலருக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையால் அனுப்பப்பட்டிருக்கிறது.
வழக்கமாக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து அனுப்பப்படும் அழைப்பிதழ்களில், ‘The President of India’ என்ற பெயர்தான் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் இந்த அழைப்பிதழில், ’The President of Bharat’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என்று பெயர் வைத்த நிலையில், கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி சுதந்திர தின உரையில் கூட பிரதமர் மோடி ‘இந்தியா’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை கவனமாக தவிர்த்தார்.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையே இந்தியாவுக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயரை பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.
மேலும் , வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி கூட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில், இந்தியாவின் பெயரை ‘பாரத்’ என்று மாற்றும் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
–வேந்தன்