கேரளா, பிகார், மணிப்பூர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்களை நியமித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும், பினராயி விஜயன் தலைமையிலான சிபிஎம் அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவிவந்தது.
இந்தநிலையில், ஆரிஃப் முகமது கான் பிகார் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு பிகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவரது நியமனம் பிகார் அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக மணிப்பூரில் குக்கி, மெய்தி இன மக்களிடையே தொடர் கலவரம் நீடித்து வருகிறது. இந்தசூழலில், மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, மிசோரம் மாநில ஆளுநராக இருந்த ஹரிபாபு கம்பம்பட்டி, ஒடிசா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மிசோரம் ஆளுநராக முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், கேரளா ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…