நான்கு நாட்கள் பயணமாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்று (நவம்பர் 27) தமிழகம் வந்தடைந்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரவுபதி முர்மு, டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலமாக கோவை வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வரவேற்றார்.
நீலகிரி ஆளுநர் மாளிகையில் இன்று ஓய்வெடுக்கும் திரவுபதி முர்மு, நாளை (நவம்பர் 28) குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் ராணுவ அதிகாரிகள் மற்றும் பயிற்சி அதிகாரிகளை சந்திக்க உள்ளார்.
தொடர்ந்து நவம்பர் 29-ஆம் தேதி நீலகிரி ஆளுநர் மாளிகையில் பழங்குடியின மக்கள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். பின்னர் நவம்பர் 30-ஆம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளும், குடியரசு தலைவர் அன்றைய தினம் டெல்லி புறப்படுகிறார்.
முன்னதாக இன்று சூலூர் விமானப்படை தளத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக குடியரசு தலைவர் நீலகிரி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கனமழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக, குடியரசு தலைவர் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக சாலை மார்க்கமாக நீலகிரி சென்றார்.
குடியரசு தலைவர் வருகையை முன்னிட்டு, நீலகிரி, கோவை மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயநிதி பிறந்தநாள்… தாய், தந்தையிடம் வாழ்த்து!
டிசம்பர் 15-ல் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம்… எடப்பாடி அறிவிப்பு!