மோசமான வானிலை காரணமாக குடியரசு தலைவர் திரெளவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவை ஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரெளவுபதி முர்மு இரண்டு நாள் பயணமாக நேற்று (பிப்ரவரி 18) தமிழகம் வந்தார். டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்த அவர், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு செய்தார்.
பின்னர், மாலை ஈஷா மகா சிவராத்திரியில் கலந்து கொண்டார். இன்று (பிப்ரவரி 19) குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்று உயிரிழந்த ராணுவ அதிகாரிகளுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த இருந்தார்.
குன்னூர் காட்டேரி பகுதியில் இன்று மோசமான வானிலை நிலவியது.
கடந்த 2021 டிசம்பர் 8 ஆம் தேதி முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேர் வெலிங்டன் ராணுவ மையத்திற்கு சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் காட்டேரி பார்க் அருகே தான் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பிபின் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்தனர்.
அதன் பிறகு ஒவ்வொரு விஐபியும் குன்னூர் வருகையின் போது வானிலை முக்கிய கவனத்தில் கொள்ளப்படுகிறது.
இப்போதும் வானிலை மோசமாக இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக குடியரசு தலைவர் திரெளவுபதி முர்முவிடம் குன்னூர் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து திரெளவுபதி முர்முவின் குன்னூர் பயணம் ரத்து செய்யப்பட்டது. மதியம் 12.15 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து திரெளவுபதி முர்மு டெல்லிக்குப் புறப்பட்டார்.
டெல்லியில் இருந்து வருபவர்கள் பொதுவாகவே ஊட்டி குளிரை அனுபவிக்க ஆசைப்படுவார்கள்.
ஆனால் இந்த முறை குடியரசுத் தலைவர் குன்னூர் வர இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக அவரது பயணம் தவிர்க்கப்பட்டுள்ளது.
செல்வம்
மயான கொள்ளை திருவிழா: வேலூரில் இன்று டாஸ்மாக் விடுமுறை!