தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பதிவுத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது.
இவ்வாறு பதிவு செய்யப்படும் ஆவணங்களில் ஒரு சில நேரங்களில் போலியான ஆவணங்களை காட்டி பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இதில், சார்பதிவாளர்கள் கூட்டு சேர்ந்து மோசடியில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பதிவு செய்யப்படும் நிலங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் நீதிமன்றம் செல்கின்றனர். இந்த மாதிரியான வழக்குகள் ஏராளமானவை நிலுவையில் உள்ளது. இதனால், வழக்கை முடிக்க பல மாதங்கள் ஆகும் என்பதால், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு உரிய தீர்வு கிடைப்பதில் காலதாமதம் ஆகிறது.
இந்தப்பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் பத்திரப்பதிவு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
அந்த மசோதாவில், போலியான ஆவண பதிவு செய்யும் பட்சத்தில், மாவட்ட பதிவாளரே உரிய விசாரணை நடத்தி தீர்வு காண முடியும்.
இந்த மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, பின்னர் கவர்னர் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல் பெறப்பட்டன.
இதனை தொடர்ந்து அந்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், மோசடியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்ய பதிவுத்துறைக்கு அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதாக வணிகவரித் துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
-ராஜ்
இவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன்