விருதுநகர் வாக்கு எண்ணிக்கை குறித்து பிரேமலதாவின் பொய் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களை சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
குறிப்பாக, விஜய பிரபாகரன் திட்டமிட்ட சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் என்றும், வாக்கு எண்ணிக்கை அறிவிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகளே தெரிவித்தனர் என்றும் கூறினார்.
மேலும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கையை நிறுத்திவைத்தனர் என்றும், தேமுதிக மற்றும் அதிமுக நிர்வாகிகள் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த கோரியும், அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை” என்றும் குற்றஞ்சாட்டினார்.
இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விருதுநகரில் மூன்றாவது முறையாக மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மாணிக்கம் தாகூர், பிரேமலதாவின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ”பிரேமலதா பொய் குற்றச்சாட்டை வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி பொய் பேசுவது அவருக்கு கைவந்த கலை.
முறைகேடு என்றால் அங்கேயே கேட்டிருக்கலாமே? நள்ளிரவு 1 மணி வரை பொறுப்புடன் பணியாற்றிய நேர்மையான அதிகாரிகள் மீது தவறான குற்றச்சாட்டை வைக்கும் போக்கு கண்டிக்கத்தக்கது.
பொய், புரட்டை முன்வைத்து பரப்புரை செய்த பிரேமலதா இந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரது சாதி அரசியல் தோல்வி அடைந்திருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். தோற்றதற்கு பின் அவர் புலம்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, விஜய பிரபாகரன் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தான் இருந்தனர். வாக்கு எண்ணிக்கை 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது என்றால் அங்கேயே கேட்டிருக்கலாமே?
இவிஎம் இயந்திரத்தில் பதிவான பிறகு சுமார் 5 மணி நேரம் தபால் வாக்கு எண்ணப்பட்டது. இரவு 7 மணிக்குப் பிறகு தோல்வியை ஒப்புக்கொண்டு சென்ற தேமுதிகவினர் ஒருநாள் கழித்து வந்து குற்றச்சாட்டு கூறுவது ஏன்?” என்று மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”திட்டமிட்ட சூழ்ச்சியால் விஜய பிரபாகரன் வீழ்த்தப்பட்டுள்ளார்” : பிரேமலதா குற்றச்சாட்டு!
சவுக்கு சங்கர் வழக்கு : அதிரடியாக கேள்வி எழுப்பிய நீதிபதி!