தேமுதிக வாக்கு வங்கி சரியவில்லை. வரும் ஜனவரி மாதம் தேர்தல் கூட்டணி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (டிசம்பர் 15) தெரிவித்துள்ளார்.
தேமுதிக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் விஜயகாந்த் தலைமையில் சென்னை திருவேற்காட்டில் நேற்று (டிசம்பர் 14) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்தை பொதுச்செயலாளராக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமிக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா, நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்த பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார்.
அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மட்டும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ஜனவரி மாதம் தேமுதிகவின் கூட்டணி அறிவிப்புகள் வெளியாகும்.
2006-ஆம் ஆண்டு தேமுதிக யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து களம் கண்டு 8.33 சதவிகிதம் வாக்குகள் பெற்றோம். தேமுதிகவின் வாக்கு வங்கி சரியவில்லை. மேலும் அதிகரிக்க தொடர்ந்து வியூகம் வகுத்து வருகிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கைதிகள் பற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங்குக்கு ஜாமீன்!