விஜயகாந்த் உடல்நிலை பாதிப்புக்கு காரணம் இதுதான்: பிரேமலதா

Published On:

| By Selvam

தேமுதிக எம்.எல்.ஏ-க்கள் செய்த துரோகத்தின் வலியால் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (டிசம்பர் 16) தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 14-ஆம் தேதி சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக பிரேமலதா நியமிக்கப்பட்டார்.

இந்தநிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “அரசியல் கட்சி ஆரம்பித்த 18 ஆண்டுகளிலேயே 100 ஆண்டு அனுபவத்தை நாங்கள் பெற்றுள்ளோம். அந்த அனுபவம் தான் எங்களுக்கு உந்துசக்தியாகவும் பக்கபலமாகவும் இருக்கும்.

இத்தனை ஆண்டுகளில் கேப்டன் பல சவால்களை சந்தித்துள்ளார். குறிப்பாக அவர் நம்பிக்கை வைத்து எம்.எல்.ஏ ஆன பலரும் செய்த துரோகத்தின் வலியால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அடுத்தடுத்து தேமுதிக பல சறுக்கல்களை சந்தித்தது. தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்க கூடாது என்ற உறுதியுடன் கேப்டன் இருந்தார். ஆனால் சில சூழ்நிலையின் காரணமாக கூட்டணி அமைத்தோம். ஆனால் அது சரியாக அமையவில்லை.

தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திடீரென எடுத்த முடிவு கிடையாது. டிசம்பர் 10-ஆம் தேதி பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடத்த அறிவிப்பதாக இருந்தோம். அதற்கான ஏற்பாடுகள் தலைமை கழகத்தில் நடைபெற்று வந்தது. மிக்ஜாம் புயல் காரணமாக டிசம்பர் 14-ஆம் தேதிக்கு செயற்குழு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கேப்டன் விஜயகாந்துக்கு எம்.ஜி.ஆர் தான் ரோல் மாடல். அதேபோல எனக்கு ஜெயலலிதா தான் ரோல் மாடல். அவருடைய தைரியம், கம்பீரம், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை  பார்த்து வியந்துள்ளேன்.

அனைத்து அரசியல் கட்சிகளும் தேமுதிகவுடன் நட்புடன் உள்ளனர். பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு தொலைபேசியிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தனர்.

ஒருநாள் மழைக்கே சென்னை தாங்கவில்லை. ஆறு, ஏரிகளை முழுமையாக தூர்வாரவில்லை. மழை நீரை சேமிக்கும் திறன் அரசுக்கு இல்லை. தொலைநோக்கு பார்வையுடன் அரசு செயல்படவில்லை. இனிவரும் காலங்களில் சென்னையில் மழை பெய்தால் ஒரு சொட்டு நீர் கூட தேங்காது என்ற நிலைக்கு செயல் திட்டங்களை வகுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.1,200 கோடிக்கு மேல் பெற்ற 5 மாநில கட்சிகள்!

பலமிக்க பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு புனேரி பல்தான் முட்டுக்கட்டை போடுமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel