தேமுதிகவுடன் தவெக கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய் தான் பதில் சொல்ல வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (நவம்பர் 10) தெரிவித்துள்ளார்.
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். தொடர்ந்து தேமுதிக மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இன்றிலிருந்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டோம்.
தமிழகம் முழுவதும் தேமுதிக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள். அதேபோல அதிமுகவில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் தேமுதிகவினர் கலந்து கொள்கிறோம். எனவே எங்களுடைய கூட்டணி சிறப்பாக ஒற்றுமையுடன் தொடர்கிறது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்துடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, “மாநாடு நடத்திய பிறகு விஜய்யை மீண்டும் பொதுவெளியில் யாரும் சந்திக்கவில்லை. இதற்கு விஜய் தான் பதில் சொல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை மாபெரும் மாநாடு நடத்தி சரித்திர சாதனை புரிந்தவர் விஜயகாந்த் என்பதை யாராலும் மறுக்க முடியாது” என்றார்.
விஜயபிரபாகரனுக்கு கட்சியில் புதிய பதவி வழங்கப்படுகிறதா என்ற கேள்விக்கு, “விஜயகாந்த் இருந்தபோதும் தற்போதும் எங்களுடைய மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்து வருகிறார்கள்.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் கலந்து பேசி செயற்குழு, பொதுக்குழு கூட்டம் எப்போது நடைபெறும் என்பதை அறிவிக்க இருக்கிறோம். அன்றைக்கு விஜயபிரபாகரனுக்கு மட்டுமல்ல, மூத்த நிர்வாகிகள் பலருக்கும் மிக முக்கியமான பதவிகளை அறிவிக்க இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2026 சட்டமன்ற தேர்தலுக்கு ரெடி ஆகுங்க… தேமுதிக மா.செ கூட்டத்தில் தீர்மானம்!
இந்திரா செளந்தர்ராஜன் மறைவு… ஸ்டாலின், அண்ணாமலை இரங்கல்!