“நியாயம் கேட்டு மதுரையை எரித்த கண்ணகிபோல் மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் வருவேன்” என்று மதுரையில் பிரேமலதா பேசியுள்ளார்.
மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விதிப்பு, மாநில அரசின் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் கண்ணில் கறுப்புத் துணி கட்டி மதுரையில் நேற்று (ஜூலை 27) ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கலந்துகொண்டு பேசிய கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “தமிழகத்தின் அரசியல் தலைநகரம் மதுரை. இந்த மண்ணில்தான் தேமுதிக தொடங்கப்பட்டது. எங்கள் திருமணம் இங்குதான் நடந்தது. அரசியல் மாநாடுகள் இங்குதான் நடந்தன. எங்கள் குல தெய்வம் இங்குதான் உள்ளது. அந்த அடிப்படையில்தான் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இங்கு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தேமுதிக ஆண்ட கட்சியும் அல்ல, ஆளும்கட்சியும் அல்ல. ஆனாலும் மக்கள் திரண்டு வந்துள்ளீர்கள். ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ரூபாய் நூறு, சோறு கொடுத்து கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். அந்த வரிசையில் பாஜகவும் சேர்ந்து விட்டது. ஆனால், இது தேமுதிகவின் கொள்கைக்காக தானா சேர்ந்த கூட்டம் இது.
திமுக அரசு தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் கொடுக்காத வாக்குறுதிகளை தற்போது நிறைவேற்றி வருகிறது. மின் கட்டணத்தை, பேருந்து கட்டணத்தை உயர்த்துவோம் என திமுக அரசு தேர்தலுக்கு முன்பு சொல்லவில்லை.
மத்திய அரசும் ஜிஎஸ்டி என்ற போர்வையில் மக்கள் மத்தியில் வரிச்சுமையை தினமும் ஏற்றி வருகிறது. கொரொனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்கள்மீது வரி என்ற பெயரில் மத்திய, மாநில அரசுகள் வலியை ஏற்படுத்துகின்றன. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கலைஞருக்கு ஏற்கெனவே பல கோடியில் நினைவகம் அமைத்துள்ளார்கள். தற்போது அவருடைய பேனா சின்னத்தை கடலில் அமைக்கப் போவதாக சொல்கிறார்கள். தாராளமாக அமைக்கட்டும். மக்கள் வரிப்பணத்தில் அமைக்காமல் திமுக அறக்கட்டளை சார்பில் அண்ணா அறிவாலயத்தில் வைக்கட்டும்.
இன்று அப்துல் கலாம் நினைவு தினம். மனிதநேயத்தை மதித்தவர், மாணவர்களுக்காக காலத்தை செலவிட்டவர் என்பதால் அப்துல் கலாம் இறுதி அஞ்சலியில் கேப்டன் கலந்து கொண்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து கள்ளக்குறிச்சி மாணவியின் மரணத்தை விசாரிக்க வேண்டும். அரசாங்கத்தை நடத்த வேண்டுமென்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மக்கள் மீது வரி விதிப்பதாக கூறுகிறார்கள். நிதி இல்லை என்றால் ஆண்ட கட்சியும் ஆளுகின்ற கட்சியும் ஊழல் செய்து சேர்த்து வைத்துள்ளவர்களிடமுள்ள பணத்தை வெளியில் கொண்டு வந்தாலே அரசை சிறப்பாக நடத்த முடியும்.
நியாயம் கேட்டு மதுரையை எரித்த கண்ணகிபோல் மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் பிரேமலதா வருவேன்” என்று பிரேமலதா பேசியுள்ளார்
– ராஜ்