தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (ஏப்ரல் 17) குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து கூட்டணி கட்சியான தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பேசிய பிரேமலதா, “மக்கள் விரும்பும் வெற்றிக்கூட்டணியாக அதிமுக, தேமுதிக கூட்டணி அமைந்துள்ளது. மதுரை என்றாலே அதற்கு அடையாளமானவர் கருப்பு எம்ஜிஆர் விஜயகாந்த் தான். விஜயகாந்த் இல்லாமல் மதுரை வந்தது சோகத்தையும் மன அழுத்தத்தையும் எனக்கு தந்துள்ளது.
கேப்டன் மறைந்ததும் வெளியில் எங்கும் செல்லாமல் இருந்ததேன். கூட்டணி அமைந்த உடன் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று எடப்பாடியார் சொன்னார்.
அதன்படி, 35 தொகுதிகளில் இரட்டை இலைக்கும், ஐந்து தொகுதிகளில் முரசு சின்னத்திற்கும் வாக்கு சேகரித்து வருகிறேன். தேர்தல் இறுதி பிரச்சாரத்தில் கேப்டன் பிறந்த ஊரில் மதுரை மண்ணில் டாக்டர் சரவணனுக்கு மதுரையின் மருமகளாக உங்க வீட்டு பெண்ணாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு வந்திருக்கிறேன்.
இன்று திமுகவின் உதயநிதி முதல் கதிர்ஆனந்த் வரை என எல்லோரும் பெண் வாக்காளர்களை இழிவாக பேசுகின்றனர்.
டாக்டர் சரவணன் வெற்றி பெற்றால் மதுரை விமான நிலையம் விரிவுபடுத்தவும், விவசாயிகள் விலை பொருட்கள், வணிகப் பொருட்கள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் மின்சார ரயில் சேவை தொடங்கப்படும், பெரிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும், மதுரையில் தொழில்நுட்பப் பூங்கா அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
லாட்டரி புழக்கம் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது. லாட்டரி அதிபர் மார்ட்டின் மூலம் ரூ.509 கோடி ரூபாயை திமுக நன்கொடையாக மறைமுக ஊழலாக பெற்றுள்ளது.
ஊழலை பற்றி பேசும் கம்யூனிஸ்ட் கட்சி, லாட்டரி அதிபரிடம் இருந்து திமுக ரூ.509 கோடி வாங்கிய்து பற்றி ஏன் பேசவில்லை. கூட்டணி கட்சியாக இருந்தாலும் தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டும்” என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
ராமலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘மிஸ்டர் மனைவி’ சீரியலின் புது ஹீரோயின் இவர்தான்… ஷபானாவுக்கு டஃப் குடுப்பாரா?
நிவாரண நிதி வழங்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசு: எடப்பாடி காட்டம்!