கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை இன்று (நவம்பர் 14) நேரில் சந்தித்து நலம் விசாரித்த தேமுதிக தலைவர் பிரேமலதா, பின்னர் மருத்துவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷம் எழுப்பினார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் நேற்று காலை பணியிலிருந்த மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்றார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். படுகாயமடைந்த மருத்துவர் பாலாஜி அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
டாக்டரை கத்தியால் குத்திய விக்னேஷிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட தனது அம்மாவிற்குக் கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி சிகிச்சை அளித்து வந்தார். ஆனால், வலி தாங்க முடியாமல் தன் அம்மா அவ்வப்போது கத்தி வந்ததால், ஒரு முறை தனியார் மருத்துவரிடம் அம்மாவை அழைத்துச் சென்று காட்டினோம்.
அப்போது தன் அம்மாவிற்கு டாக்டர் பாலாஜி அளித்த சிகிச்சையால் பக்க விளைவுகள் உண்டாகியுள்ளது என்று அந்த தனியார் மருத்துவர் தெரிவித்தார். இதனால் தான் டாக்டரை குத்தினேன் என்று விக்னேஷ் தெரிவித்தார்.
இதற்கிடையில் படுகாயம் அடைந்த மருத்துவர் பாலாஜிக்கு கிண்டி மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் உடல் நலம் குறித்து நாம் நேற்று செய்தி வெளியிட்டிருந்தோம்.
சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் பாலாஜியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் நேற்று(நவம்பர் 13) நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். முதல்வர் ஸ்டாலின் ஃபோன் மூலம் அவரிடம் நலம் விசாரித்தார். இன்று காலை மருத்துவர் பாலாஜி தான் நலமுடன் இருப்பதாக ஒரு காணொளியில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் சங்கம் போராட்டம் நடத்தப்போவதாக நேற்று அறிவித்திருந்தனர். ஆனால், நேற்று மாலை 4 மணி அளவில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன், போராட்டத்தை வாபஸ் பெற வைத்தார்.
இந்த நிலையில், இன்று காலை தமிழக பாஜக முன்னாள் தலைவரும் முன்னாள் புதுச்சேரி ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் அவரும் ஒரு மருத்துவர் என்பதால் மருத்துவர் பாலாஜிக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.புதிய தமிழகம் கட்சித் தலைவரான கிருஷ்ணசாமியும் அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவர் பாலாஜியைச் சந்தித்து நலம் விசாரித்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அவருக்கு ஆறுதல் கூறினார். இதற்கிடையில் தேமுதிக தலைவர் பிரேமலதாவும் அவரை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் மருத்துவமனைக்கு வெளியே கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடு பட்டுவந்த மருத்துவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர்களுடன் தரையில் அமர்ந்து இணைந்து “உறுதி செய் உறுதி செய்! டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்!” என்று சிறிது நேரம் கோஷமிட்டுவிட்டுக் கிளம்பிச் சென்றார்.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மகளிர் உரிமை தொகை… உதயநிதி சொன்ன குட் நியூஸ்!
தூத்துக்குடியில் ஆய்வு… கனிமொழி பங்கேற்காதது ஏன்? – உதயநிதி விளக்கம்!
இந்தியன் ரயில்வே 96 சதவிகிதம் மின்மயம்… டீசல் இன்ஜின்கள் என்ன ஆகும்?