அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு திருவள்ளூர், மத்திய சென்னை, கடலூர், தஞ்சாவூர், விருதுநகர் ஆகிய ஐந்து தொகுதிகள் இன்று (மார்ச் 20) ஒதுக்கப்பட்டன. அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா முன்னிலையில் தொகுதி உடன்பாடு இன்று கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “2011-ல் உருவான வெற்றிக் கூட்டணி மீண்டும் உருவாகியுள்ளது. இந்த வெற்றி மீண்டும் இந்த நாடாளுமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும், 2026 சட்டமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.
தேர்தல் என்றாலே பலமுனை போட்டிகள் வருவது சகஜம். ஏற்கனவே பல தேர்தல்களை அதிமுகவும், தேமுதிகவும் சந்தித்துள்ளோம். எனவே எத்தனை முனை போட்டிகள் வந்தாலும், அந்த சவாலை சந்தித்து வெற்றியை இந்த கூட்டணி நிச்சயம் அமைக்கும்.
இந்த முறை தேமுதிக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று உறுதியாக சொன்னதாலும், மரியாதை நிமித்தமாக வீட்டிற்கு வந்து கூட்டணிக்கு அழைப்பு விடுத்ததாலும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம்.
என்டிஏ கூட்டணிக்கு வாழ்த்துக்கள். நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்” என்றார்.
‘தேமுதிகவுக்கு மாநிலங்களவை தொகுதி ஒதுக்க வேண்டும் என்று கூட்டணி பேச்சுவார்த்தையின் போது எதிர்பார்த்தீர்கள். தற்போது 5 மக்களவை தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதே’ என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, “நாளை எடப்பாடி அண்ணனும் அதிமுக மூத்த தலைவர்களும் தேமுதிக அலுவலகத்திற்கு வருகை தருவார்கள். அப்போது ஒரு நல்ல செய்தி தேமுதிக தலைமை அலுவலகத்தில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தொகுதிப் பங்கீட்டில் வாசனை தவிக்கவிட்ட அண்ணாமலை
மூளையில் ஆபத்தான ரத்தக் கசிவு..அப்பல்லோவில் நடந்த அறுவை சிகிச்சை..குணமாகி வரும் சத்குரு