சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி கூறியதற்குக் கண்டனம் தெரிவித்து நாட்டின் தலைநகர் டெல்லியில் இன்று (செப்டம்பர் 25) சாமியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “சனாதனத்தை டெங்கு, மலேரியா, கொரோனாவை போன்று ஒழிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.
அவரது பேச்சுக்கு நாடெங்கும் இருந்து பாஜக, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்நிலையில் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, சனாதனம் என்பது எச்.ஐ.வி போன்றது என்று கூறியிருந்தார்.
இதனால் உதயநிதி, ஆ.ராசாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு, இதற்குப் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தலைநகர் டெல்லியில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சாமியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
“சனாதன் மகாமண்டலம்” என்ற அமைப்பைச் சேர்ந்த சாமியார்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எம்.பி.ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த மெளரியா உள்ளிட்டோருக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
உதயநிதி உள்ளிட்டோரின் உருவபொம்மைகளை எரித்து கோபத்தை வெளிப்படுத்தி, சரோஜினி நகரில் உள்ள கோவிலிலிருந்து தமிழ்நாடு பவன் நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இவர்களை ஆப்ரிக்கா அவென்யூ பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது, “சனாதன தர்மத்திற்கு எதிராக சில அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து வெளியிடுவதை நிறுத்த வேண்டும் என்றும், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் சாமியார்கள் வலியுறுத்தினர்.
“சனாதன் மகாமண்டலம்” அமைப்பின் தலைவர் நாராயண் கிரி மகராஜ் கூறுகையில், “இந்த விவகாரத்தில் மாநில அரசு மவுனம் காப்பது ஆச்சரியம் அளிக்கிறது.
சனாதன தர்மத்திற்கு எதிரான அரசியல்வாதிகளின் வெறுப்புப் பேச்சுகளை உச்ச நீதிமன்றம் கூட கவனத்தில் கொண்டிருக்கிறது. சனாதன தர்மத்திற்கு எதிராக அரசியல்வாதிகள் பயன்படுத்தும் வார்த்தைகள் சமூகங்களுக்குள் விரோதத்தை உருவாக்குகிறது, அத்தகைய அரசியல் தலைவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
சாமியார்களின் இந்த ஆர்ப்பாட்டத்தால் தலைநகரில் பரபரப்பு நிலவியது.
பிரியா
டெண்டர் முறைகேடு வழக்கு: அக்டோபர் 17-க்கு ஒத்திவைப்பு!
பாஜகவா? திமுகவா?: கோஷம் போட்டு மெஜாரிட்டி நிரூபித்த தொண்டர்கள்