பிரதமர் மோடி தெய்வமகன் கிடையாது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று (மே 25) தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழா அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் இன்று நடைபெற்றது.
அம்பேத்கர் சுடர் விருது நடிகர் பிரகாஷ் ராஜுக்கும், மார்க்ஸ் மணி விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், பெரியார் ஒளி விருது திராவிடர் கழக பிரச்சார செயலாளர் அருள்மொழி, காமராசர் கதிர் விருது பேராயர் எஸ்ரா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது ராஜ் கெளதமன், காயிதே மில்லத் விருது சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது சுப்பராயலு ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரகாஷ் ராஜ் பேசும்போது, “திருமாவளவன் போல அரசியலில் எனக்கு நீண்ட கால பயணம் இல்லை. ஆனாலும் நான் ஏன் அரசியல் பேசுகிறேன் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.
உடம்புக்கு ஒரு காயம் ஏற்பட்டால், சும்மா இருந்தாலும் அந்த வலி குறைந்துவிடும். ஆனால், ஒரு சமுதாயத்திற்கு ஒரு நாட்டுக்கு காயம் ஏற்பட்டால், நாம் பேசாமல் இருந்தால் வலி அதிகமாகிவிடும்.
நான் ஒரு கலைஞன் தான். ஆனால், என்னுடைய திறமையால் நான் கலைஞனாகவில்லை. என்னை விட திறமைசாலிகள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
மக்களுடைய அன்பு மற்றும் நம்பிக்கையால் உங்கள் முன்பாக மேடையில் நிற்கிறேன். என்னை மேடை ஏற்றிய மக்களுக்கு ஒரு சமுதாயத்திற்கு பிரச்சனை வரும்போது ஒரு கலைஞன் கோழையானால் ஒரு சமுதாயம் கோழையாகிவிடும்.
நான் செய்துகொண்டிருப்பது பெரிய வேலை அல்ல. அது என்னுடைய கடமை. அது என்னுடைய மனசாட்சி. ஏனென்றால் வாழ்க்கை ஒரு கலைஞனாக எனக்கு புரிகிறது. அந்த புரிதல் எனக்கு திறமையால் வந்ததல்ல.
கெளரி லங்கேஷ், மார்க்ஸ், அம்பேத்கர், காந்தி, பாரதியார் போன்றவர்களின் சிந்தனையை படித்து அதை உள்வாங்கியதால் இந்த புரிதல் எனக்கு வந்தது.
10 வருடமாக தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். 9 வருடமாக தான் இந்த மன்னரை நான் எதிர்த்துக்கொண்டிருக்கிறேன். மன்னிக்கவேண்டும், இப்பொதெல்லாம் மன்னர் என்று சொல்ல முடியாது. அவர் தான் தெய்வ குழந்தை ஆகிவிட்டாரே.
நாட்டுக்கு அவரால் ஏதாவது துன்பம் ஏற்பட்டால், அவரை திட்ட முடியாது. தெய்வம் சோதிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
கெளரி லங்கேஷின் அப்பா லங்கேஷ் தான் எனது ஆசான். அவர் ஒரு பத்திரிகை நடத்தி வந்தார். என்னுடைய ஆசானின் மகள் கெளரி என் வீட்டு வாசல் முன்னால் கொல்லப்பட்டாள்.
நீயும் சும்மா இருப்பியா என்று கெளரியின் மரணம் என்னிடம் கேள்வி எழுப்பியது. அதனால் தான் அவளை புதைக்கவில்லை, விதைத்தேன் என்று சொன்னேன்.
இந்த பாசிசம் தான் சனாதனத்தின் டெரரிஸ்ட். ஒரு குரலை அடைக்க வேண்டும் என்று நினைத்தால், அதைவிட வேகமான ஆழமான குரல் வரும் என்பதால் தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன்.
ஜூன் 4-ஆம் தேதிக்கு பிறகு இந்த தெய்வ மகன் போன பிறகு எனக்கு வேலை இருக்குமான்னு தெரியல. அம்பேத்கர் சுடர் விருது எனக்கு கொடுக்கிறீர்கள். நான் தலித் கிடையாது.
ஆனால், அம்பேத்கர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதாமல் போயிருந்தால் இந்த நாடு எப்படி இருக்கும் என்று நினைக்கும்போது எனக்கு பயமாகியிருக்கிறது.
தெய்வமகன் மன்னர் விமானத்தில் வருவார், தேரில் வருவார். மக்கள் அவரை காண முடியாதபடி வேலிக்கு அந்தப்புறம் தான் நிற்கிறார்கள். அவருக்கு என்றைக்கு புரியும் நம்முடைய பசி. அவர் தெய்மகன் கிடையாது, டெஸ்ட் டியூப் பேபி.
தோல்வி பயம் வந்தவுடன் மன்னர் ராட்சனாகிவிட்டார். அந்த நிலைமையில் தான் தற்போது அவர் இருக்கிறார்” என்று பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
6-ஆம் கட்ட தேர்தல்: 59.06% வாக்குகள் பதிவு!
அஜித்தை வியக்க வைத்த கங்குவா.. AK 64 இயக்குநர் சிவா?