உயர்கல்வித்துறை செயலாளராக பணியாற்றி வந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ் இன்று (அக்டோபர் 2) துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் துணை முதல்வராக உதயநிதி செப்டம்பர் 28 ஆம் தேதி நியமிக்கப்பட்ட நிலையில், அவரது செயலாளர் யார் என்ற கேள்வி அதிகாரிகள் வட்டாரத்தில் எழுந்தது.
இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில், ’உதயநிதியின் செயலாளர் யார்? ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குள் போட்டி’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், “துணை முதல்வரின் செயலாளர் பதவி ரேஸில் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக இருக்கிற சாய்குமார் ஐ.ஏ.எஸ்., உயர் கல்வித் துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்., அமைச்சர் உதயநிதியின் தற்போதைய துறையான விளையாட்டுத் துறை செயலாளராக இருக்கும் அதுல்ய மிஸ்ரா ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட அதிகாரிகளின் பெயர்கள் இருக்கின்றன” என குறிப்பிட்டிருந்தோம்.
அதனைதொடர்ந்து கடந்த 30ஆம் தேதி துணை முதல்வரின் செயலாளர் பிரதீப் யாதவ்வா? அமுதாவா? கோட்டை ரேஸ்! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், “அதுல்ய மிஸ்ராவை துணை முதல்வரின் செயலாளராக நியமிக்க முதல்வருக்கு விருப்பமில்லை என்று ஒரு தகவல் வருகிறது. அதேநேரம் பிரதீப் யாதவ் பெயர் தான் துணை முதல்வரின் செயலாளர் பதவிக்கு தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது.
ஆனால், முதல்வருக்கு நெருக்கமான சில அதிகாரிகள் திடீரென முன்னாள் உள்துறைச் செயலாளரும், இப்போதைய பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளருமான அமுதாவை துணை முதல்வரின் செயலாளராக்க தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள்” என குறிப்பிட்டிருந்தோம்.
இந்த நிலையில் உயர்கல்வித்துறை செயலாளராக பணியாற்றி வந்த பிரதீப் யாதவ் ஐஏஎஸ் இன்று (அக்டோபர் 2) துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தவிர மேலும் சில முக்கிய துறைகளில் செயலாளர்களாக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி,
கால்நடைத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக பணியாற்றி வந்த கே. கோபால் ஐஏஎஸ், உயர்கல்வித் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TANGEDCO) தலைவராக பணியாற்றி வந்த ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக இருக்கும் சத்ய பிரதா சாகுவுக்கு கால்நடைத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
சமூக நலத்துறை ஆணையராக பணியாற்றி வந்த அமுதவல்லி ஐஏஎஸ், அரசு, கைத்தறி, கைவினைப் பொருட்கள், ஜவுளி மற்றும் காதி துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஆணையராக பணியாற்றி வந்த இ.சுந்தரவல்லி ஐஏஎஸ், கல்லூரிக் கல்வி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுத் துறை இணை செயலாளராக பணியாற்றி வந்த விஷ்ணு சந்திரன் ஐஏஎஸ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக பணியாற்றி வந்த நந்தகுமார் ஐஏஎஸ், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமூகநலத் துறை ஆணையராக உள்ள லில்லி ஐஏஎஸ், ஜவுளித்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஐஏஎஸ், பொதுத்துறை துணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தர்மேந்திர பிரதாப் யாதவ் ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் செயலராக உள்ள சி.விஜயராஜ் குமாருக்கு, மனிதவள மேலாண்மைத் துறை செயலாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
எப்போதுமே எளிமையான உணவுதான்… ஞாயிற்றுக்கிழமை மட்டும் இட்லியாம்!- முகேஷ் அம்பானியின் உணவு ரகசியம்!
“மது ஒழிப்பு மாநாட்டிற்கு விசிகவினரின் ஆதரவே இல்லை”: தமிழிசை சௌந்தரராஜன்