திருச்சியில் சிவாஜி கணேசன் நினைவாக அமைக்கப்பட்ட சிலையை திறக்க வேண்டும் என்று அமைச்சர் கே.என்.நேருவிடம் நடிகர் பிரபு கோரிக்கை வைத்துள்ளார்.
திருச்சியில் செயிண்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் இன்று (ஏப்ரல் 23) எங்கள் முதல்வர் எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரபு திறந்து வைத்தார்.
முதல்வர் ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சியை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் பிரபு பேசியபோது, “சிறு வயதில் இருந்தே முதல்வர் ஸ்டாலினுடன் எனக்கு நல்ல பழக்கம் உள்ளது . அவர் மிகவும் கடினமாக உழைக்க கூடியவர். முதல்வராக இருப்பதற்கு அவருடைய உழைப்பு தான் காரணமாகும்.
கழக உறுப்பினர், இளைஞரணி தலைவர், மேயர், துணை முதல்வர், இன்றைக்கு மக்களுடைய அன்பாலும் ஆசிர்வாதத்தாலும் முதல்வராகி இருக்கிறார்.
இந்த புகைப்பட கண்காட்சியை பார்ப்பதன் மூலம் மக்களுக்காக அவர் செய்யக்கூடிய வேலைகளை நாம் அறிய முடியும்.
அவருடைய புகைப்பட கண்காட்சியை நான் திறந்து வைத்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திருச்சி எனக்கு மிகவும் நெருக்கமான ஊராகும். முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு நிறைய நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசன் நினைவாக அமைக்கப்பட்ட சிலையை திறக்க வேண்டும் என்று நான் அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்