அதிகாரப் பகிர்வு… துணை முதல்வர்… அதே நிலைதான்: ஆ.ராசாவுக்கு ஆதவ் அர்ஜூனா பதில்!
திமுகவுடன் கூட்டணி மற்றும் ஆட்சியில் பங்கு தொடர்பாக தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா இன்று (செப்டம்பர் 24) தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தொடர்பாக ஏற்கெனவே திமுக கூட்டணிக்குள் சலசலப்பு நிலவி வருகிறது.
இதற்கிடையே சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களே இப்போது துணை முதல்வராக ஆகும் போது, 40 வருஷமாக அரசியலில் இருக்கின்ற எங்கள் தலைவர் திருமாவளவன் முதலமைச்சராகவோ, துணை முதலமைச்சராகவோ ஆகக்கூடாதா?’ என ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், “வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது. வடமாவட்டங்களில் விசிக இல்லாமல் திமுக ஜெயிக்க முடியாது” என்றும் பேசியிருந்தார்.
திமுக – விசிகவினர் கண்டனம்!
ஆதவ் அர்ஜூனாவின் இந்த கருத்து திமுக தலைமை மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தரப்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி-யுமான ஆ.ராசா கண்டனம் தெரிவித்திருந்தார்.
அவர், “பா.ஜ.க.விற்கு துணை போகும் அளவிற்கு இது போன்ற குழப்பத்தை விளைவிக்கும் வகையில் ஆதவ் அர்ஜூனா கருத்துச் சொல்வதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்” என்று தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார், சட்டமன்ற குழு தலைவர் சிந்தனை செல்வன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, மாநில செய்தி தொடர்பாளர் கு.கா.பாவலன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலரும் இன்று கண்டனம் தெரிவித்தனர்.
விசிகவின் வளர்ச்சியை சுருக்காதீர்கள்!
இந்த நிலையில் ஆதவ் அர்ஜூனா புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு இன்று அளித்த பேட்டியில், கூட்டணி மற்றும் அதிகார பகிர்வு தொடர்பான தன்னுடைய கருத்துகளில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “கூட்டணியை உருவாக்கிய பிறகு ’இது என்னுடைய வெற்றி’ என ஒரு தனிக்கட்சி கூறியது தவறான மனப்பான்மை.
விசிக கட்சிக்கு 60 தொகுதிகளில் சராசரியாக தலா 30 ஆயிரம் ஓட்டுகள் உள்ளது. தமிழ்நாட்டில் விசிகவுக்கு குறைந்தபட்சம் 30 லட்சம் ஓட்டு உள்ளது. இப்படிப்பட்ட விசிகவின் வளர்ச்சியை சுருக்காதீர்கள். இந்த சிந்தனை தான் தவறு என்று சொல்கிறேன். திமுகவில் ஆ.ராசா ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கூட்டணி உருவாக்கி, பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், தன்னுடன் பயணித்த சக கூட்டணி கட்சிகளுக்கு பெருந்தன்மையுடன் அமைச்சரவையில் இடம் கொடுக்கிறார். இதுதான் அதிகாரப் பரவல். இந்த சிந்தனை தமிழ்நாட்டில் வரவேண்டும் என்பது தான் என் எதிர்பார்ப்பு. விசிக கட்சியினருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வேண்டும். இதில் எந்த தவறும் இல்லை. எங்களுடைய கொள்கையும் அதுதான்” என தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பற்றி பேசினால் சங்கியா?
மேலும் அவர், “தமிழக தேர்தல் அரசியலில் தனித்து நின்று போட்டியிடுவது தான் எங்களது எதிர்கால திட்டம். ஆ. ராசா அண்ணனுடன் நான் நிறைய இடங்களுக்கு பயணப்பட்டுள்ளேன். அவருடைய கருத்துகளுடன் எப்போதுமே நான் உடன்பட்டதுண்டு. என்னைப் பற்றி ஆ.ராசா அண்ணனுக்கு நன்றாக தெரியும். ஆனால் இந்த விஷயத்தில் இதுபோன்று ஏன் சொன்னார் என்று தெரியவில்லை.
1999 காலகட்டத்தில் இருந்து தலைவர் திருமாவளவன் என்ன பேசி வருகிறாரோ, அதை தான் நான் இன்று பேசுகிறேன். தோழர் ரவிக்குமார் 2016ல் ‘தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை உருவாக்குவோம்’ என்று புத்தகம் எழுதியுள்ளார். அதை நான் படித்திருக்கிறேன். இந்த கொள்கையை தான் எதிர்காலத்தை குறிப்பிட்டு நான் பேசுகிறேன்.
விசிகவில் இருந்து அமைச்சர்கள் உருவானால் பாஜகவுக்கு ஆதரவளிப்பார்களா? இதுபோன்ற கருத்துகளை உருவாக்காதீர்கள். பாஜகவை எதிர்த்து பேசினால் ஆண்டி- இண்டியன் என்று எச்.ராஜா சொல்வது போன்று, அதிகாரத்தை பற்றி பேசினால் பாஜகவினர், சங்கிகள் என்று சொல்கிறீர்களா? அப்படி நான் போக வேண்டுமென்றால், நான் எப்போதோ சென்றிருப்பேன்” என ஆதவ் அர்ஜூனா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆஸ்கருக்கு செல்லும் ‘லாபதா லேடீஸ்’!
தஞ்சாவூர், சேலம் இளைஞர்களுக்கு சொந்த ஊரிலேயே வேலை! – மினி டைடல் பார்க் திறப்பு!