2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று (அக்டோபர் 28) அறிவித்திருந்தார்.
விஜய்யின் இந்த அறிவிப்பு திமுக கூட்டணி கட்சிகளுக்குள் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா விஜய்யின் இந்த அறிவிப்பை வரவேற்றிருந்தார். அதேவேளையில், விஜய்யை பாராட்ட வேண்டியதுமில்லை, புறக்கணிக்க வேண்டியதுமில்லை என்று விசிக பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் சரவணன், இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு தற்போதே மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று நடைபெற்ற கட்சி மாநாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தங்கள் கட்சி கூட்டணி ஆட்சிக்கு தயார் என பேசி உள்ளார்.
ஆகவே, தாங்கள் தற்பொழுதே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும். தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்
எனவே, தமிழகத்தில் தங்கள் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது. இதை தான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். எனவே தமிழக மக்களின் எண்ணத்தை தாங்கள் நிறைவேற்றி தமிழகத்திற்கு தாங்கள் முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், ” விஜய் பேசியதில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் எனக்குப் பிடித்திருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’அட்டைக்கத்தியுடன் போர்க்களத்தில் இறங்கியுள்ளேன் ‘ – எழுத்தாளர் சாரு நிவேதிதா
ரஜினிக்கு பதிலாக விஜய்… பாஜகவை சந்தேகிக்கும் அப்பாவு