டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது. டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷாகிப் சிங் வர்மாவின் மகனும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளருமான பர்வேஷ் வர்மா ஆம் ஆத்மி ஓருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்துள்ளார். இவர்தான், டெல்லி முதல்வராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
இவர் தவிர டெல்லி முதல்வராக இருந்த அதிஷியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த ரமேஷ் பிதுரி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகளும் எம்.பியுமான பன்சூரி ஸ்வராஜ் , 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸமிரிதி இரானி ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் உள்ளன. பட்டியலினத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் துஷ்யந்த் கௌதம் பெயரும் டெல்லி முதல்வர் பெயருக்கு அடிபடுகிறது.
டெல்லி நிர்வாகம் எப்படி உருவானது?
கடந்த 1947-ஆம் ஆண்டு இந்திய அரசியல் நிர்ணய சபை டெல்லி, அஜ்மீர், கூர்க் போன்ற மத்திய அரசின் நிர்வாகத்திலுள்ள மகாணங்களை நிர்வகிப்பது குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. பட்டாபி சீதாராமையா தலைமையிலான 7 பேர் கொண்ட குழு 3 மாதங்கள் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையில், மூன்று அமைச்சர்கள், 50 எம்.எல்.ஏக்கள் கொண்ட சட்டமன்றம் ஒரு லெப்டினன்ட் கவர்னர் கொண்ட தனி அரசாக மாற்ற அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், இந்த பரிந்துரை அரசியலமைப்பு சபையின் உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு , சர்தார் வல்லபாய் படேல், டாக்டர்.ராஜேந்திர பிரசாத் போன்ற பெரும்பாலான காங்கிரஸ் மூத்த தலைவர்கள் நாட்டின் தலைநகரான டெல்லி மீது மத்திய அரசுக்கு தனி அதிகாரம் இருக்க வேண்டும் என்று கருதினர்.

இறுதியாக, 1951-ஆம் ஆண்டு , டெல்லி மாகாணம் ஆக்கப்பட்டது. டெல்லிக்கு 48 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம், ஒரு சட்ட மேலவை மற்றும் ஒரு முதலமைச்சர் பதவி ஆகியவை உருவாக்கப்பட்டது.
1952-ஆம் ஆண்டு டெல்லின் முதல் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் 34 வயது பிரம் பிரகாஷ் பொறுப்பேற்றார். பிரம் பிரகாஷ் டெல்லி முதல்வராக 1952 மார்ச் 17 ஆம் தேதி முதல் 1955 பிப்ரவரி 12 ஆம் தேதி வரை இருந்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியின் குர்முக் நிகால் சிங் டெல்லி முதல்வராக 1956 நவம்பர் 1 ஆம் தேதி வரை தொடர்ந்தார்.
1956 ம் ஆண்டு இந்தியாவில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட்டபோது, டெல்லி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. சட்டமன்றம் ஒழிக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் நியமிக்கும் லெப்டினன்ட் கவர்னர் டெல்லியில் ஆட்சியை நடத்தினார்.
லெப்டினன்ட் கவர்னருக்கு கீழ் மெட்ரோபாலிடன் கவுன்சில் ஒன்று அமைக்கப்பட்டது. இதில், 56 தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களும் 5 நியமன உறுப்பினர்களும் இருப்பார்கள். இந்த கவுன்சிலுக்கு தலைவர் ஒருவரும் இருப்பார். இந்த கவுன்சில்தான் டெல்லியின் நிர்வாகத்தை கவனித்து வந்தது.
1967 முதல் 1990 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சிதான் இந்த கவுன்சிலில் அதிக உறுப்பினர்களை கொண்டு டெல்லியின் நிர்வாகத்தை நடத்தி வந்தது. இதற்கிடையில், 1977 – 80-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் மத்தியில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த போது மட்டும்தான் டெல்லியில் காங்கிரஸ் அதிகாரத்தில் இல்லாமல் இருந்தது.

1991-ஆம் ஆண்டு அரசியலமைப்பு (அறுபத்தி ஒன்பதாவது திருத்தம்) சட்டம் டெல்லி யூனியன் பிரதேசத்தின் பெயரை டெல்லி தேசிய தலைநகரப் பகுதி (NCTD) என அதிகாரப்பூர்வமாக மாற்றியது. இந்த திருத்தச் சட்டம் டெல்லிக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்களைக் கொண்ட ஒரு சட்டமன்றத்தையும் வழங்கி முதல்வர் பதவி மீண்டும் கொண்டு வரப்பட்டது.
1993 ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த முதல் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 70 தொகுதிகளில் 49 தொகுதிகளை கைப்பற்றியது. மதன் லால் குரானா டெல்லியின் மூன்றாவது முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி தொடர்ந்தது. அடுத்த 15 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி டெல்லியை ஆண்டது. பின்னர், 10 ஆண்டுகள் ஆம் ஆத்மி அங்கு ஆட்சியில் இருந்தது. தற்போது, மீண்டும் டெல்லி பாரதிய ஜனதா கைக்கு வந்துள்ளது.
வழக்கமாக , மாநிலங்களில் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும். டெல்லியில் மட்டும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் காவல்துறை இயங்கும். கோவையில் போலீஸ் கமிஷனராக பணியாற்றிய சஞ்சய் அரோராதான் தற்போது டெல்லி போலீஸ் கமிஷனராக உள்ளார். இவர், தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.