ஆட்சியில் அதிகாரம் : முழு வீடியோவை வெளியிட்ட திருமாவளவன்
‘ஆட்சியில் அதிகாரம்’ குறித்த வீடியோவை மீண்டும் பதிவிட்டுள்ளார் திருமாவளவன்.
கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட மறைமலைநகரில் விசிக சென்னை மண்டல சிறப்புச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசினார் விசிக தலைவர் திருமாவளவன்.
மது ஒழிப்பு மாநாடு குறித்து பேசிய அவர், “இப்படி ஒரு போராட்டம் நடத்துவதால் தேர்தல் களத்தில் நமக்கு பாதிப்பு ஏற்படும், கூட்டணியில் சிக்கல் ஏற்படும். 2026 தேர்தலில் பின்னடைவு ஏற்படும் என்றாலும் கூட இந்த நோக்கத்தில் இருந்து ஒருபோதும் நாம் விலகக் கூடாது.
இதை யாருக்கோ பதில் சொல்லும் நோக்கில் நான் பேசவில்லை. ஏனென்றால் இது சிக்கலான ஒரு பிரச்சினை” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக, அதிமுகவுக்கு பிறகு பெரிய மக்கள் இயக்கமாக விசிக இருக்கிறது என்று தெரிவித்த திருமாவளவன், “தமிழ்நாட்டில் இதற்கு முன்னதாக கூட்டணி ஆட்சி என்று யாரேனும் வலியுறுத்தினார்களா… இல்லையா என தெரியவில்லை. ஆனால் 2016லேயே கூட்டணி ஆட்சி என்று வலியுறுத்திய கட்சி விசிக. அமைச்சரவையில் பவர் ஷேர் வேண்டும் என்று வலியுறுத்தினோம்” என்று கூறியுள்ளார்.
“கடைசி மனிதனுக்கும் சனநாயகம்!
எளிய மக்களுக்கும் அதிகாரம்!
ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! – என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ” –என்று கடந்த செப்-12 ஆம் தேதி மறைமலை நகரில் நடைபெற்ற மண்டல… pic.twitter.com/ukP8YXsfqR
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 14, 2024
இந்த வீடியோவை கட் செய்துதான் இன்று காலையில் இருந்து திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவதும், டெலிட் செய்வதுமாக இருந்து வருகிறது.
தற்போது மீண்டும் பதிவேற்றப்பட்டுள்ளது. காலை முதல் கட் செய்த வீடியோ மட்டும் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது, முழு வீடியோவும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருமாவளவன், “இந்த வீடியோ அட்மினால் பதிவு செய்யப்பட்டு நீக்கப்பட்டிருக்கிறது. அதாவது இரு அட்மின் உள்ளனர். அதில் ஒருவர் வீடியோவை பதிவிட்டிருக்கிறார். ஒருவர் நீக்கியிருக்கிறார். அதனால் ஏற்பட்ட குழப்பம் தான் என்று விளக்கமளித்திருந்தார்.
இந்தநிலையில் மூன்றாவது முறையாக பதிவேற்றப்பட்டுள்ளது.
“”கடைசி மனிதனுக்கும் சனநாயகம்! எளிய மக்களுக்கும் அதிகாரம்!
ஆட்சியிலும் பங்கு !அதிகாரத்திலும் பங்கு ! – என 1999ல் தேர்தல் பாதையில் அடியெடுத்து வைத்த போதே உரத்து முழங்கிய இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திமுக விசிக கூட்டணியில் முறிவா? என்று அரசியல் களத்தில் பலரும் பேச ஆரம்பித்துள்ள நிலையில் மீண்டும் வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பது திமுக – விசிகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பிரதமர் வீட்டில் புதிய உறுப்பினர் தீப ஜோதி
ராமேஸ்வரம் டூ தலைமன்னார்: கோவா கூட்டத்தில் முக்கிய கோரிக்கை வைத்த அமைச்சர் எ.வ.வேலு