அமித் ஷா வரும்போது மின்வெட்டு: செல்லூர் ராஜூ விமர்சனம்!

Published On:

| By christopher

அமித்ஷா விமான நிலையம் வரும்போது ஏற்பட்ட மின்வெட்டு தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் ஆர்.ஜே. தமிழ்மணி கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமினை இன்று (ஜூன் 11) நடத்தியது.

இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் ஆர்.ஜே தமிழ்மணி கல்வி அறக்கட்டளை நிறுவனரும், அவரது மனைவியுமான ஜெயந்தி ராஜுவும் இணைந்து துவக்கி வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து செல்லூர் ராஜு பேசுகையில், “தமிழக மக்கள் அனைவரும் அதிமுக மாநாட்டை எதிர்பார்த்துள்ளனர். மாநாட்டு தொடர்பான பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது” என்றார்.

மேலும் அவர், “மத்திய உள்துறை அமைச்சர் விமான நிலையம் வரும்போது மின்வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழகத்தில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளது.

திமுக எனும் கரடியிடம் தமிழகம் மாட்டிவிட்டது. மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சியின் மீது திமுகவினரே அதிருப்தியில் உள்ளனர்.

பாஜகவிற்கு முதன்முதலில் பல்லாக்கு தூக்கியது திமுக தான். அதேபோன்று காங்கிரஸுக்கும் பல்லாக்கு தூக்கி ஒரு லட்சத்தி 75 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டது இந்த திமுக தான்” என்று குற்றஞ்சாட்டினார்.

தொடந்து, “கூட்டணி என்பது தோளில் போட்டிருக்க துண்டுக்கு சமம். கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் மட்டுமே.. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாவில் ஒருவருக்கொருவர் எதிர்த்துக்கொண்டு தமிழகத்தில் கூட்டணி அமைப்பது கொள்கை கூட்டணியா?

அதிமுகவில் தான் இஸ்லாமியர் ஒருவர் அவை தலைவராக உள்ளார். அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் சபாநாயகராக பணியாற்றினார். பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்ணை அமைச்சர் ஆக்கியதும் அதிமுக தான்.

மேலும் இஸ்லாமியர் அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கியதும், பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்த சங்மாவை குடியரசு தலைவராய் ஆக்கிய பெருமையும் அதிமுகவுக்கு உள்ளது.

இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சிறப்பான வெற்றியடையும்” என்று தெரிவித்தார்.

இராமலிங்கம்

அதிதீவிர புயலை அமைதிப்படுத்த கடற்கரையில் பாஜக எம்.எல்.ஏ பூஜை!

சேலத்தில் கலைஞர் சிலை, ஈரடுக்கு பேருந்து நிலையம் திறப்பு!