மூத்த அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே மின் தடை ஏற்பட்டது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டும், தமிழ்நாடு மின் வாரியம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாலும் மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் தமிழகம் முழுவதும் ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர்.
குறிப்பாக கடந்த மே மாதத்தின்போது மாநிலம் முழுவதும் பரவலாக மின்வெட்டு ஏற்பட்டது. இதற்கு, ”மத்திய மின்தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு வழக்கமாக கிடைத்துவந்த மின்சாரத்தில் 750 மெகாவாட் திடீரென குறைக்கப்பட்டதால்தான் மின்வெட்டு பிரச்சனை ஏற்பட்டது” என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.
ஆனாலும், தொடர்ந்து தமிழகம் முழுவதும் மின் தடை ஏற்பட்டு வருகிறது. அதிலும் சென்னையில் திடீரென மழை பெய்துவிட்டால் போதும். உடனே மின் தடை ஏற்பட்டுவிடுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் சென்னையில் ஒருநாள் பெய்த மழையினால், இரவில் ஏற்பட்ட மின் தடை மறுநாள் காலை தொடர்ந்தது. இதனால் பல பாதிப்புகள் ஏற்பட்டன. ஆனாலும், அரசுத் தரப்பில் மின் தடை ஏற்படுவதில்லை எனச் சொல்லப்பட்டே வருகிறது.

இந்த நிலையில், மூத்த அமைச்சர் ஒருவரே மின் தடை பாதிப்பால் நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறியது விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
திமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று (செப்டம்பர் 13), வேலூர் மாவட்டத்திலுள்ள தனது சொந்த ஊரான காட்பாடியில் அவர் படித்த அரசுப் பள்ளியில், இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அவர் பேசும்போது, தொடர்ச்சியாக இருமுறை மின்வெட்டு பிரச்சினை ஏற்பட்டு மைக் வேலை செய்யாமல் போனது. கொஞ்ச நேரம் நின்றபடியே மைக்கை தட்டிப் பார்த்தார் துரைமுருகன். சவுண்டு வரவில்லை திரும்பிப் பார்த்தார்.
மேடையில் இருந்த அதிகாரிகள் அவசரமாக மின் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். ஆனால் பதில் கிடைக்கவில்லை.
அதுவரை நிற்க முடியாமல் தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தார் அமைச்சர் துரைமுருகன். அப்படியும் மின்சாரம் வராததால் பத்து நிமிடங்கள் காத்திருந்துவிட்டு நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டார்.
மூத்த அமைச்சர் கலந்துகொண்ட நிகழ்ச்சியிலேயே மின் தடையா எனப் பலரும் தமிழக அரசை கிண்டலடிக்க ஆரம்பித்தனர்.
அமைச்சர் ஒரு நிகழ்ச்சிக்குச் செல்கிறார் என்றால், ’மினிஸ்டர் மூவ்மென்ட்’ என்ற பெயரில் அதுகுறித்த விவரங்கள் அனைத்தும் முன்கூட்டியே
அந்த மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர், உயரதிகாரிகள் எனப் பலருக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கும்.
இதன் மூலம் அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் போக்குவரத்து, மின்சாரம் ஆகியவை தடங்கல் இல்லாமல் அதிகாரிகள் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார்கள்.
அப்படியிருக்கையில், அமைச்சர் கலந்துகொள்வது தெரிந்தும், காட்பாடியில் மின் தடைபட்டது ஏன் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதன் முதற்கட்டமாக, மின்சார பணியாளர்கள் 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜெ.பிரகாஷ்
விக்ராந்த் கப்பல் மூலம் 5,000 வீடுகளுக்கு மின்சாரம்!