வருகிற நவம்பர் 20 ஆம் தேதி மகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சில வேட்பாளர்களை அறிவித்திருந்தார் விசிக தலைவர் திருமாவளவன்.
மீதி தொகுதிகளில் இந்தியா கூட்டணியை ஆதரிப்போம் என்றும் சொல்லியிருந்தார் திருமா. அதன்படியே கடந்த வாரங்களில் தனது வேட்பாளர்களுக்கும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கும் தேர்தல் பிரச்சாரமும் செய்தார்.
இந்நிலையில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிற போக்கர்டான், அவுரங்காபாத், புலம்பிரி, பிம்பிரி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் முறையே சுனில் வக்கேகர், ரவிக்கிரன் அர்ஜுன் பகாரே, கைலாஷ் பன்சோடே, ராகுல் மல்காரி சோனாவானே ஆகியோர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
பூனா மாவட்டம் பிம்பிரி தொகுதியில் போட்டியிடும் ராகுல் மல்காரி மட்டும் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார் மற்ற வேட்பாளர்கள் அனைவரும் பானை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்”என திருமாவளவன் இன்று (நவம்பர் 16) அறிவித்துள்ளார். இது தொடர்பான படங்களையும் தனது சமூக தளத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தமிழ்நாட்டில் போட்டியிட்ட விசிக பானை சின்னத்தைப் பெற்றிருந்தது குறிப்பிடத் தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்