தமிழகத்தின் ஒன்றியத்துடனான முரணை திராவிட-பார்ப்பனிய அரசியல் முரணாக புரிந்துகொண்டு பார்ப்பனிய எதிர்ப்பை சற்று தளர்த்துவதன் மூலம் அதைச் சரி செய்யலாம் என முயற்சி செய்கிறது திமுக அரசு. இது முக்கிய துறைகளில் அரச முதலாளித்துவ இருப்பை அடிப்படையாகக் கொண்ட திராவிடப் பொருளாதார மாதிரிக்கும் அந்த இருப்பை அடியோடு ஒழித்து அதன் சொத்துகளையும் சந்தையையும் தனியாரிடம் தாரைவார்க்கும் ஒன்றியத்தின் பொருளாதாரக் கொள்கைக்குமான முரண். இந்த முரணை பஞ்சத்தில் அடிபட்ட பிரிட்டிஷ் இந்தியா எப்படி ஏகாதிபத்திய நேரடி ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டது; அப்படி விடுபட்ட காலத்திய இந்திய அரசியலுக்கும் தமிழ்நாட்டு அரசியலுக்குமான வேறுபாடு; அதன் பிறகு ஏற்பட்ட அரசியல் பொருளாதார மாற்றங்களை தொகுப்பாகப் புரிந்துகொள்வதன் மூலமே சரியான தீர்வினை நோக்கி நாம் நகர முடியும்.
யார் யாருக்கான சுதந்திரத்துக்காக எப்படிப் போராடினார்கள்?
பிரிட்டிஷ் இந்தியாவில் வெளியூர் முதலாளித்துவ ஏகாதிபத்தியமும் உள்ளூர் நிலவுடைமை-பார்ப்பனிய சமூக ஏகாதிபத்தியமும் மக்களின் உழைப்பை உறிஞ்சி வாழ்ந்ததுதான் அப்போது நிலவிய பஞ்சத்துக்கு காரணம். பார்ப்பனிய-பனியாக்களின் கட்சியான காங்கிரஸ் தரகு முதலாளிகள் மற்றும் நிலவுடைமையாளர்களை ஆங்கிலேயர்கள் ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்கும் சுதந்திரத்தைக் கோரியது. இவர்களின் பொருளாதாரப் பின்புலத்தில் நால்வர்ண பார்ப்பனியத்தை அடிப்படையாகக் கொண்டு காந்தியை ஒரு இந்து மத குருவாக மகாத்மாவாக கட்டமைத்து இந்து மதத்தைச் சேர்ந்த முதல் மூவர்ணத்தை அவர்களின்கீழ் அரசியல் ரீதியாக அணி திரட்டியது. பார்ப்பனிய எதிர்ப்பின்றி ஏகாதிபத்திய எதிர்ப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட கம்யூனிஸ்டுகள் கடைசியில் கரைந்து காணாமல் போனார்கள்.
நிலவுடைமை எதிர்ப்பின்றி பார்ப்பனிய எதிர்ப்பை முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட அம்பேத்கரும் பெரியாரும் இந்த சாதிய ஏற்றத்தாழ்வுக்குத் தீர்வாக சமூகநீதி சமத்துவச் சீர்திருத்தத்தை முன்மொழிந்தார்கள். இந்து மதத்துக்கு வெளியில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்களை பௌத்தர்களாக ஒருங்கிணைக்க முனைந்தார் அம்பேத்கர். பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களை சுயமரியாதையுள்ள திராவிடர்களாக ஒன்றிணைந்து ஆரிய வழிவந்த பார்ப்பனியத்தை எதிர்க்க அறைகூவல் விடுத்தார் பெரியார்.
பார்ப்பனியமும் நிலவுடைமையும் இந்த மண்ணில் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள். பின்னாளில் கம்யூனிஸ்டுகள் நிலவுடைமையை மட்டும் எதிர்த்து பார்ப்பனியத்தை விட்டது, இந்தியாவெங்கும் உழைக்கும் வர்க்க உடைப்புக்கும் பார்ப்பனிய மீட்சிக்கும் வித்திட்டு அதை மீண்டும் அரியணையில் நிலைத்திருக்கச் செய்தது. தமிழ்நாட்டில் நிலவுடைமை எதிர்ப்பற்ற பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பு, நடைமுறை சாத்தியமற்ற தனிநாடு கோரிக்கை ஆகியவை நிலவுடைமையுடனும் பார்ப்பனியத்துடனும் சமரசம் செய்து கொண்ட திராவிட கறுப்பையும் கம்யூனிச சிவப்பையும் அடையாளமாகக் கொண்ட சீர்திருத்த கட்சியான திமுக உருவாக காரணமாகிறது. இந்த மாற்றங்கள் தமிழக காங்கிரஸில் எதிரொலித்து ஒன்றிய பார்ப்பனியம் தமிழக பார்ப்பனர்களை கைவிட்டு காமராஜர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்களை தலைமையில் அமர்த்தி தன்னை எளியவர்களின் கட்சியாக காட்டிக்கொள்ள வைக்கிறது.
பார்ப்பனர்களின் ஆதிக்கத்துக்கான கல்வி மறுப்பை கைவிட்டு நிலவுடைமைகளின் நீதிக்கட்சியின் கோரிக்கையான கல்விப் பரவலாக்கத்தை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. பெரியாரின் ஒடுக்கப்பட்ட மக்கள்சார் அரசியலும் அழுத்தமும் ஆதரவும் கடைகோடி மக்களுக்கும் சேர்த்து அதைக் கொண்டு செல்லக் காரணமாகிறது. ஆனால், காமராஜரின் காங்கிரஸால் பெரும்பான்மையின் அன்றைய பிரச்சினையான வறுமைக்குத் தீர்வுகாண இயலவில்லை. நிலவுடைமைகளின் ஆதரவில் ஆட்சி செய்த காமராஜரின் காங்கிரஸால் எப்படி அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்?
இந்திய சுதந்திரம்; ஆளும்வர்க்க நலன் உழைக்கும் வர்க்க வறுமை…
இந்தப் பிரச்சினைக்கான மூலம் சுதந்திர இந்தியா என்ற தேசிய கட்டமைப்பிலும் அப்படியான கட்டமைப்பை அந்நிய ஏகாதிபத்தியம், தரகு முதலாளிகள், மன்னர்கள், நிலவுடைமையாளர்கள் என அனைத்து ஆளும்வர்க்கத்தின் நலனையும் பிரதிபலிக்கும் வகையில் கட்டமைத்ததிலும் அந்தக் கட்டமைப்பின் பிரதிநிதியாக காங்கிரஸ் செயல்பட்டதிலும் இருக்கிறது. அந்நிய ஏகாதிபத்தியமும் பார்ப்பனிய தரகு முதலாளிகளும் கோரிய மூலதனம் மற்றும் தொழிற்துறை அவர்களுக்கு முழுமையாகக் கொடுக்கப்பட்டது. பொருள் உற்பத்திக்கான மூலப்பொருட்களும் மனிதர்களுமே உண்மையான மூலதனம்; பணம் என்பது இவற்றை திரட்டி குறிப்பிட்ட செயல்பாடுகளை நோக்கி செலுத்துவதற்கான வெறும் கருவி (Means of mobilizing and canalizing) எனச் சொல்லும் முதலாளிகளின் பாம்பே திட்டம் அந்த முக்கிய மூலதனக் கருவியை அந்நியர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு நேருவின் காங்கிரஸுடன் மல்லுக்கட்டி தங்களிடமே வைத்துக் கொண்டார்கள்.
இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த வங்கியில் இவர்களின் தொழில்களுக்கான மூலதனத்தைத் திரட்டி பயன்படுத்திக் கொண்டு தொழிற்துறையில் இவர்கள் மட்டுமே கோலோச்சினார்கள். இவர்களின் இந்த ஏகபோகத்தை நிலைநாட்டும் விதமாக இவர்களின் பிரதிநிதியான ஒன்றிய பார்ப்பனியம் தொழிற்துறையை தன்னிடம் வைத்துக் கொண்டது.
நிலவுடைமையாளர்கள் ஆதிக்கம் செலுத்திய மாநிலங்களிடம் விவசாயம் சென்றது. தொழிற்துறையை தன்னிடம் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை உருவாக்கும் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பொறுப்புகளை மாநிலங்களிடம் தள்ளிவிட்டார்கள். நிலவுடைமையாளர்கள் நிலங்களை தங்களிடம் வைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்ட மக்கள் உணவுக்கு இவர்களிடம் எப்போதும்போல உழைத்து ஓடாய் தேய்வதை உறுதிசெய்து கொண்டார்கள். மன்னர்களுக்கான மாதாமாதம் செலவுக்கான மானிய பணமும் தடையின்றி கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
படிப்பறிவற்ற இந்தியாவில் இட ஒதுக்கீடு என்ன மாற்றத்தைக் கோரப்போகிறது? ஆங்கிலேய அதிகாரிகள் வெளியேறி அந்த இடங்களில் அப்போது படித்திருந்த மூவர்ணம் முழுமையாக அமர்ந்துகொண்டு நிர்வாக ரீதியாக இந்தியாவை ஆட்சி செய்வதை உறுதி செய்து கொண்டது. இப்படி ஆங்கிலேய நேரடி ஆளுகை ஒழிந்து ஏகாதிபத்திய நிதி மூலதன, தொழிற்துறை தொடர்ச்சியோடு இந்திய ஆளும் வர்க்கம் மூலதனம், தொழில், விவசாயம், கல்வி, வேலை என அனைத்தையும் பெற்றது. பாம்பே திட்டம், சோசலிச திட்டமிட்ட பொருளாதாரமும் முதலாளித்துவ ஜனநாயக அரசியலும் கலந்த கலவை (Judicious Combination) இப்படியாக செயல் வடிவம் கண்டது. இந்தப் புதிய ஒட்டுரக (Combo) சோசலிச சுதந்திரம் யாருக்கானது? உழைக்கும் பெரும்பான்மைக்கா? அல்லது இவர்களின் உழைப்பில் உட்கார்ந்து சாப்பிட்டு பழகிய முதல் மூவர்ணத்துக்கா?
வறுமையைக் கூட்டிய நேரு கால காங்கிரஸின் கொள்கை
ஆளும் வர்க்கத்துக்கு அனைத்தும் கிடைத்து, உழைக்கும் வர்க்கத்துக்கு ஒன்றும் கிடைக்காமல் போன இந்த ஆட்சி மாற்றம் உண்மையான சுதந்திரமா என அப்போதே கேள்வி எழுப்புகிறார் மாவோ. சோவியத் ரஷ்யாவில் ஸ்டாலின் இறப்புக்குப் பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றிய திருத்தல்வாத கும்பல் சோவியத்தை சமூக ஏகாதிபத்தியமாக மாற்றியமைக்கிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரு துருவமாக உடைந்த உலகம் இதற்குப்பின் மூன்றாகிறது. இரு துருவத்தையும் மறுதலித்த மாவோ, ஜப்பான் நீங்கலான ஆசியா, தென்னமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளை உள்ளடக்கிய மூன்றாம் உலக கோட்பாட்டை முன்மொழிகிறார். மேற்குக்கு எதிராக சோவியத்தை நிறுத்தி இந்திய தரகு முதலாளிகளின் சுயசார்பை எட்டும் வகையில் சார்பிலா கொள்கையைப் பின்பற்றிய நேருவின் காங்கிரஸ் மாவோவின் இந்த வறிய நாடுகளின் மக்கள் நலனை முன்னிறுத்திய மூன்றாம் உலகத்தின் அங்கமாக இருக்க எந்த அடிப்படையும் இல்லை.
டாட்டா, பிர்லா, டால்மியா போன்ற தரகு முதலாளிகளோடு 551 (1957) வெளிநாட்டு நிறுவனங்கள் இயங்கிய “சுதந்திர” இந்தியாவில் அவர்களின் பிரதிநிதியான காங்கிரஸின் ஆளுகையில் இந்த நிறுவனங்களுக்கான சந்தை விரிவாக்கத்துக்கு ஏற்ற வெளியுறவு கொள்கைதான் முன்னெடுக்கப்படும். இந்த பிராந்தியத்தில் இந்த நிறுவனங்களின் சந்தை ஆதிக்கத்தை உறுதி செய்யும் வகையில் இந்த நாடுகளைக் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் பிராந்திய வல்லரசாகவே இந்தியா தன்னைக் கட்டமைத்துக் கொள்ள முயலும். திபெத்திய ஆளும் வர்க்கமான தலாய்லாமா குழுவினருக்கு அரசியல் தஞ்சம் அளித்தது; அதன் பின்னரான இந்தியாவின் மற்ற நாடுகளுடனான போர்கள், தலையீடுகள் ஆகியவற்றை இந்தப் பகுதி சந்தைகளுக்கான உலக வல்லரசுகளின் போட்டி, அதில் உள்ளூர், அந்நிய நிறுவனங்களின் நலனை முன்னிறுத்திய இந்திய அரசின் நகர்வுகள் என்பதன் அடிப்படையில்தான் புரிந்துகொள்ள வேண்டும்.
ஆங்கிலேய நேரடி ஆதிக்கம் ஒழிந்த இந்தியாவில் பாம்பே திட்டம் கோரியதைப் போலவே தொழிற்துறைக்கு அதிக முதலீடும் முக்கியத்துவமும் அளித்து விவசாயம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. தங்களுக்கு தொழிற்துறை ஏகபோகத்தை உறுதிசெய்து கொண்ட தரகு முதலாளிகள் நிலவுடைமைகளுக்கு நிலச்சீர்திருத்தத்தை பாம்பே திட்டத்தில் முன்மொழிந்தார்கள். அதனடிப்படையில் மொழிவாரி மாநில பிரிப்புக்குப் பிறகு நில உச்சவரம்புச் சட்டமும் கொண்டு வரப்பட்டாலும் மாநில அரசியலில் கோலோச்சிய நிலவுடைமைகள் ஒரு நபருக்கு அல்லது குடும்பத்துக்கு 20-125 ஏக்கர் என அதை நிர்ணயித்து நகைப்புக்குரியதாக்கினார்கள்.
அதேபோல மூலதனம் முழுவதையும் முதலாளிகள் வைத்துக்கொண்டு காங்கிரஸை ஆட்சி செய் என்று சொன்னால் ஆள்வதற்கான நிதியை அவர்கள் எங்கிருந்து பெறுவார்கள்? இறுதியாக 1956இல் காப்பீடு துறையை தேசியமயமாக்கி முதலாளிகளும், ஒன்றியமும் ஆளுக்கு கொஞ்சமாக நிதியைப் பிரித்துக் கொள்கிறார்கள்.
ஆனால், இந்த நிதி முழுவதும் தொழிற்துறையைக் கட்டமைக்கவே பெரிதும் பயன்பட்டதை அமெரிக்க சுற்றுப்பயணத்தின்போது வெளிப்படுத்திய அண்ணாவின் வார்த்தைகளில் சொல்வதானால் “முதலிரண்டு ஐந்தாண்டு திட்டங்களில் தொழிற்துறையை வளர்த்தெடுத்து கிராமப்புறங்களை கவனிக்கத் தவறிவிட்டோம்; இந்தக் கிராமப்பகுதிகளை வளர்த்தெடுத்து அதன் அடித்தளத்தில் எங்களின் பொருளாதார வளர்ச்சியை எட்ட வேண்டியிருக்கிறது: அதுவும் அமெரிக்காவைப் போலல்லாமல் ஜப்பானைப் போல சில ஏக்கர் நிலத்தில் நவீன உழவு இயந்திரங்களை இளைஞர்களிடம் கொடுத்து இதை எட்ட வேண்டும்” என்கிறார் அவர்.
இந்தியாவை வழிக்குக் கொண்டுவந்த ஏகாதிபத்தியம்
மூலதனம், தொழிற்துறை, விவசாயம் என அனைத்தும் இப்படி ஒரு சிலரிடம் குவியும்போது சுதந்திர இந்தியாவில் மட்டும் அது வேறுவிதமான பொருளாதார விளைவுகளையா ஏற்படுத்திவிடப் போகிறது?! இப்போது போலவே அது வறுமை, வேலைவாய்ப்பின்மை, கல்வி, மருத்துவ வசதிகளற்ற அவல சூழலை மேலும் தீவிரப்படுத்தியது. இதைத் தணிக்க 1960-63இல் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒரிசா, மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் (1955) ஆகிய மாநிலங்களில் கொண்டு வரப்பட்ட நிலச்சீர்திருத்த சட்டம் அடிப்படையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் காங்கிரஸுக்கான நிலவுடைமைகளின் ஆதரவை அது அசைத்தது. 1962இல் ஏற்பட்ட இந்திய-சீன போர், 1965இல் ஏற்பட்ட இந்திய-பாகிஸ்தான் மோதல் ஆகியவை இந்திய அரசின் பாதுகாப்பு செலவீனங்களை (4% GDP) அதிகரித்தது.
போதாக்குறையாக அப்போது ஏற்பட்ட வறட்சியினால் நாட்டில் உணவு உற்பத்தியும் (17%) குறைந்து விலைவாசி உயர்வு ஏற்பட்டு உணவுப் பொருட்களை அதிகமாக இறக்குமதி செய்து மக்களின் பட்டினியை போக்க வேண்டிய சூழல். அதற்கு தேவையான அந்நியச் செலாவணி கையிருப்பு இல்லாத சூழலைப் பயன்படுத்தி தனக்கு சாதகமான பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த சொல்லி நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது மேற்குலகம். இரு பக்கமும் நின்றுகொண்டு போக்கு காட்டிய இந்தியாவை வழிக்கு கொண்டுவர அதுவரையிலும் இந்தியாவுக்கு செய்து வந்த உணவுப்பொருள் உதவியை 1964இல் தொடர முடியாது எனக் கூறிவிட்டார்கள்.
அப்போது இருந்த தங்கத்தின் மதிப்பை தெரிவிக்கும் டாலர் மதிப்பீட்டு முறையில் இப்போது போல “சந்தை” ரூபாயின் மதிப்பை மாற்றியமைக்கும் வழியில்லை. ஆதலால் 1966இல் ஆட்சிப் பொறுப்பேற்ற இந்திராகாந்திக்கு உலக வங்கியும், ஐஎம்எஃப்பும் சேர்ந்து கொண்டு கடன் வேண்டுமானால் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பைக் குறைக்கும் பொருளாதார “சீர்திருத்தத்தை” செய்ய வேண்டும் என நிபந்தனை விதித்தன. இப்படிக் குறைக்கும்போது இந்தியாவில் பொருட்களை உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மூலப்பொருட்கள், தொழிலாளர் கூலி உள்ளிட்டவைகளுக்கு ஆகும் செலவு குறைந்து லாபம் பெருகும். அதேசமயம் இந்தியா பெறும் டாலர் கடனை மதிப்பு குறைவான இந்திய ரூபாயில் செலுத்தும்போது கடன் கொடுத்தவர்களுக்கு அதிக லாபம். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்கள்.
இதை எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் ஐம்பதாயிரம் கடன் கேட்டு வரும் பண்ணையாளிடம் கடன்கொடுக்கப் போகும் பண்ணையார், பண்ணையாளின் சம்பளத்தை 50 ரூபாயில் இருந்து 25 ரூபாயாகக் குறைத்துக் கொள்ள வேண்டும் என நிர்பந்திப்பதைப் போன்றது. இதன் மூலம் குறைந்த கூலியில் தானிய உற்பத்தி செய்து அதிக லாபம் அடையும் பண்ணையார் கொடுத்த கடனுக்கு வேலையாளிடம் இரண்டு மடங்கு காலம் வேலையும் வாங்கி இரட்டை லாபம் பார்க்கும் நரித்தந்திரம். விலைவாசி உயர்வு, பஞ்சம், பாதிக்கப்பட்ட மக்கள் இடதுசாரிகளின் பக்கம் சாய்ந்து செய்த கலகம் ஆகியவை இந்திராவின் காங்கிரஸை வேறு வழியின்றி உலக வங்கியின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு கடன் வாங்க வைக்கிறது. இந்திராவின் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த அதே ஆண்டு டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பை 4.76இல் இருந்து 7.50 ஆக குறைத்து ரூபாய் மதிப்பிழப்பைத் தொடங்கி வைக்கிறது.
திமுகவை அரியணையேற்றிய உணவுக் கோரிக்கை அரசியல்
முதலாளிகளுக்கு ஏற்ற தொழிற்துறைக்கான பொருளாதாரக் கொள்கை, அவர்களுக்கான ஒற்றை சந்தை உருவாக்கத்திற்கான ஒரே மொழி, ஒரே தேசிய கட்டமைப்புக்கான இந்தித் திணிப்பு, அந்த நிறுவனங்களின் சந்தை விரிவாக்கத்துக்கான பிராந்திய தலையீடுகள் ஆகியவை பெரும்பான்மை மக்களின் வறுமையைத் தீவிரமாக்கி காங்கிரஸ் அரசின் மீதான ஏமாற்றமாக மாறுகிறது. காங்கிரஸ் நிலவுடைமைகளை கைவிட்டு நிலச்சீர்திருத்தத்தை முன்னெடுத்தது, நாடு முழுவதும் காங்கிரஸை உடைத்து பிராந்திய கட்சிகள் உருவாக காரணமாகிறது. 1967இல் நடைபெற்ற 16 மாநிலச் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் எட்டில் மட்டுமே தனிப்பெரும்பான்மை பெற்று மீதமுள்ள எட்டில் தமிழ்நாடு, கேரளா, ஒரிசா ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்து மற்ற ஐந்தில் இழுபறி நிலை ஏற்படுகிறது. திமுகவின் மலிவு விலையில் அரிசி என்ற வாக்குறுதியின் வலு எத்தகையது என்பதை இந்த அரசியல் சூழல் படம்பிடித்துக் காட்டுகிறது.
இதன்பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திராவின் காங்கிரஸும் வறுமை ஒழிப்பு கோசத்தை முன்னிறுத்தியே வெற்றி பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. உடனடியாக நடைமுறைப்படுத்தும் வாய்ப்புள்ள திமுகவின் இந்த வாக்குறுதி மக்களை ஈர்க்கிறது. அதன்மூலம் உணவு வழுங்கும் பொறுப்பை சந்தையிடம் இருந்து அரசே எடுத்துக் கொள்கிறது. நிலத்தில் ஏகபோகம் கொண்டிருந்த நிலவுடைமைகள் இப்போது அரசிடம் அது சொல்லும் விலையில் கொடுக்க வேண்டிய சூழலை நோக்கி நகர்த்துகிறது. அதுவரையிலும் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் தேவையான உணவுக் கோரிக்கை அரசியல் வடிவம் பெறுகிறது.
டாலர் பிரச்சினையும் அவசரநிலை கால சோசலிச மாற்றங்களும்
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஆசிய சந்தைகளைக் கட்டுப்படுத்த அமெரிக்காவின் தலைமையிலான முதலாளித்துவ ஏகாதிபத்தியமும் சோவியத் ரஷ்யாவின் சமூக ஏகாதிபத்தியமும் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்தக் காலத்தில் முத்தாய்ப்பாக வியட்நாம் போரில் அமெரிக்கா தோல்வியை தழுவி அவர்களுக்குள் மோதிக்கொள்கிறார்கள். பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் டாலரைக் கொடுத்து தங்கத்தைக் கொடு என கேட்க ஆரம்பிக்கின்றன. தங்கத்தை அடிப்படையாகக்கொண்ட டாலர் மதிப்பு விதி உடையும் சூழல். வரப்போகும் பொருளாதாரப் புயலை புரிந்துகொண்ட இந்திய தரகு முதலாளிகள் வங்கிகளை அரசிடம் ஒப்படைத்துவிட்டு நகர்ந்துகொள்ள முனைகிறார்கள்.
வங்கிகளை நாட்டுடைமை ஆக்குவதோடு மன்னர் குடும்ப மானியத்தை நிறுத்துவது, நிலச்சீர்திருத்தத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது என அறிவித்து சோசலிச கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தப் போவதாக அறிவிக்கிறது இந்திராவின் தலைமையிலான காங்கிரஸ். மாறும் உலக சூழலை கருத்தில்கொண்டு அதுவரையிலான சோசலிச திட்டமிட்ட பொருளாதாரமும் முதலாளித்துவ ஜனநாயக அரசியலும் கலந்த கலவை மாதிரியில் சோசலிசத்தின் பங்கைக் கூட்டி சார்பிலா வெளியுறவு கொள்கையை திருத்தி சோவியத்தின் பக்கம் திசைமானியை திருப்புகிறது இந்தியா.
இது நிலவுடைமை மற்றும் மன்னர் பரம்பரைகளிடம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி காங்கிரஸை இரண்டாக உடைக்கிறது. நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்புகிறது. மேற்குலகம் இந்திராவின் காங்கிரஸுக்கு எதிராக திரும்புகிறது. எதிர்பாராத திருப்பமாக அமெரிக்கா தங்கத்தின் அடிப்படையிலான டாலர் விதிக்கு பதிலாக எண்ணெயின் மதிப்பைத் தெரிவிக்கும் பெட்ரோடாலர் மதிப்பு விதியை அறிவிக்கிறது. உள்ளும் புறமும் ஏற்பட்ட இந்த எதிர்ப்பு, குழப்பகரமான சூழல், எதிர்பாராத புதிய உலக பெட்ரோடாலர் மதிப்பு மற்றும் நிதிய மாற்றங்களை சமாளிக்க அவசரநிலையை அறிவிக்கிறது, ஒருங்கிணைந்த இந்திய சந்தைக்கான தேவையையும் அதைக் கட்டிக்காக்கும் பொறுப்பையும் ஏற்கும் இந்திய தொழிற்துறை ஆளும்வர்க்கம். அது நிலவுடைமைகளின் எதிர்ப்பை அடக்கி குறிப்பிட்ட அளவு நிலச்சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துகிறது. அந்நிய நிறுவனங்கள் பல வெளியேறுகின்றன. இந்தக் கொந்தளிப்பான சூழலைப் பயன்படுத்திக் கொண்டு விவசாயிகளுக்கு சாதகமான சட்டங்களை இயற்றி தனது கட்சியின் கொடியில் உள்ள சிவப்பு நிறத்துக்கு அர்த்தத்தை ஏற்படுத்திக் கொள்கிறது திமுக.
இந்திரா காங்கிரஸால் ஒடுக்கப்பட்ட மன்னர்களும் நிலவுடைமைகளும் மாற்றை நோக்கி நகர்கிறார்கள். அது ஆர்எஸ்எஸ்ஸின் ஜனசங்கம் உள்ளிட்ட கட்சிகளை வலுப்படுத்தி வளரச் செய்கிறது. தமிழ்நாட்டில் திமுகவின் நிலவுடைமைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் அந்தக் கட்சிக்கு மாற்றான ஒன்றை நோக்கி அவர்களை நகர்த்துகிறது. மக்கள் ஆதரவை காங்கிரஸ் ஏற்கனவே இழந்துவிட்ட நிலையில் திமுகவை உடைத்து நிலவுடைமை சார்பு சினிமாத்தன கவர்ச்சிகர அரசியலை அடிப்படையாகக் கொண்ட அதிமுக உருவாவதற்கான அடிப்படையை உருவாக்குகிறது.
நிலவுடைமை ஆதிக்க உடைப்பும் சமூக சந்தைப் பொருளாதாரமும்
560 சமஸ்தானங்கள், நிலவுடைமையாளர்கள், தரகு முதலாளிகள் என சிதறிக்கிடந்த இந்தியாவில் இவர்களின் நலனை பிரதிநிதித்துவப்படுத்த (1952) 14 தேசிய கட்சிகள், 60 பிராந்திய கட்சிகள் என மொத்தம் 74 கட்சிகள் இருந்திருக்கின்றன. அந்நிய நிறுவனங்கள், தரகு முதலாளிகள், மன்னர்கள், நிலவுடைமையாளர்கள் என அனைவரின் நலனையும் பிரதிநிதித்துவப்படுத்திய காங்கிரஸ் அனைவரையும் உள்வாங்கிய நிலையில் அது 1957இல் 4 தேசிய கட்சிகள், 12 பிராந்திய கட்சிகள் என 16 கட்சிகளாக குறைந்தது. எழுபதுகளில் மன்னர்கள், நிலவுடைமைகளின் ஆதரவை காங்கிரஸ் இழந்த நிலையில் கட்சிகளின் எண்ணிக்கை இப்போது மீண்டும் 25ஆக உயர்கிறது. வங்கி அரசுடைமை ஆக்கப்பட்டு மூலதனம் முழுவதும் ஒன்றிய அரசின் கீழ் வருகிறது. இந்த குழப்பகரமான நெடிய போராட்ட காலம் மாநிலங்களில் (குறிப்பாக தமிழகத்தில்) நிலவுடைமைகள் கொண்டிருந்த ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருகிறது. முன்பு தொழிற்துறையை முன்னிறுத்திய ஒன்றியத்தின் பொருளாதாரக் கொள்கை இப்போது விவசாயத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்கிறது.
பசுமைப் புரட்சி திட்டத்தோடு அரச மூலதனமும், குறிப்பிடத்தக்க அளவு பகிர்ந்தளிக்கப்பட்ட நிலமும் இப்போது சேர்ந்து கொள்கிறது. நிலவுடைமை ஏகபோகம் உடைந்து விவசாய உற்பத்தி பரவலாகி உணவு உற்பத்தியை அது ஓரளவு பெருக்குகிறது. அரசின் கட்டுப்பாட்டில் நிதியும் மூலதனமும் முழுமையாக வந்து எரிபொருள், உணவு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் அரசின் இருப்பை அடிப்படையாகக் கொண்ட முதலாளிகள், சிறு, குறு உற்பத்தியாளர்கள், விவசாயிகள் இந்த கட்டமைப்புக்குள் இயங்கும் சமூக சந்தைப் பொருளாதாரம் நடைமுறைக்கு வருகிறது.
இந்தச் சூழலை பயன்படுத்தி நிலவுடைமைகளின் ஆதிக்கத்தை உடைத்து இந்த புதிய சமூக சந்தை பொருளாதாரக் கொள்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய தமிழகம் இப்போது அந்தக் கட்டமைப்பை உடைத்துக் கொண்டிருக்கும் ஒன்றியத்துடன் முரண்படும் சூழலை எப்படி எட்டியது? அப்படியான சூழலை ஏற்படுத்திய காரணிகள் என்ன என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்…
தொடரும் …
பகுதி 1 / பகுதி 2 / பகுதி 3 / பகுதி 4
கட்டுரையாளர் குறிப்பு
தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.
சோனியா, ராகுல் வீட்டை போலீஸ் சுற்றி வளைப்பு: என்ன நடக்கிறது டெல்லியில்?