டிஜிட்டல் திண்ணை: துறை மாற்றமா?  பதற்றத்தில் அமைச்சர்கள்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும்,  ‘அமைச்சரவை மாற்றம் விவகாரத்தில் ஏதும் முன்னேற்றங்கள் உள்ளதா?’ என்ற கேள்வியை மெசஞ்சர் அனுப்பி வைத்துவிட்டுக் காத்திருந்தது.

அதற்கு வாட்ஸ் அப் தனது பதில் மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.   “டிசம்பர் 14 ஆம் தேதி தமிழக அமைச்சரவையில்  உதயநிதி ஸ்டாலின் இணைத்துக் கொள்ளப்படப் போகிறார் என்று உறுதியான தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், சில அமைச்சர்கள்  தங்கள் துறைகள் பறிக்கப்படக் கூடுமோ முக்கியத்துவம் குறைந்துவிடுமோ என்ற பதற்றத்தில் இருக்கிறார்கள்.

உதயநிதிக்கான துறைகள், அவரது துறைக்கான செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன் தீப் சிங் பேடி என்பது வரையில் ஒருபக்கம் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கம் அமைச்சர்கள், ‘என்னய்யா உன் துறை மாறுதா…. என் துறை மாறுதா.. ஒண்ணுமே புரியலையே’ என்ற ரீதியிலேயே கடந்த சில நாட்களாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அமைச்சர்களில் சற்று அதிகமான பதற்றத்தில் இருப்பவர் சுற்றுச் சூழல் அமைச்சர் மெய்யநாதன் தான். அவர் வசம் இருக்கும் சுற்றுச் சூழல் மற்றும்  இளைஞர் நலன் விளையாட்டு  ஆகிய துறைகளில் இருந்து இளைஞர் நலன், விளையாட்டு ஆகிய துறைகளை உதயநிதியிடம் கொடுப்பது என முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரம் தனக்கு வெறும் சுற்றுச் சூழலை மட்டும் கொடுப்பார்களா அல்லது  கேபினட்டில் இருந்தே மாற்றிவிடுவார்களா என்ற சந்தேகம் மெய்யநாதனுக்கு  கிளம்பிவிட்டது. இதையடுத்து கட்சியின் பவர்ஃபுல் முன்னோடிகளை தேடித் தேடிச் சென்று சந்தித்து வரும் மெய்யநாதன், ‘அண்ணே… என் பெயர்தான் எல்லா இடத்துலயும் அடிபடுது’ என்று விசாரித்து வந்திருக்கிறார். அப்போது அவரிடம், ‘உன்கிட்டேர்ந்து துறை மாறலாமே தவிர உன் அமைச்சர் பதவிக்கு பிரச்சினை இல்ல. நீதான் செஸ் ஒலிம்பியாட்ல உதயநிதியோட சேர்ந்து நல்லா  பண்ணிருக்கியே… அதிகாரிகள் சில பேரு உன் மேல புகார் வாசிச்சிருக்காங்க. ஆனா உன் பதவிக்கு இப்பவரைக்கும் ஆபத்து எதுவும் இல்ல’ என்று சொல்லியனுப்பியிருக்கிறார்கள். அப்புறம்தான் கொஞ்சம் பெருமூச்சு விட்டிருக்கிறார் மெய்யநாதன்,

இன்னொரு பக்கம் அமைச்சர் ராஜ கண்ணப்பனும் சில முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்.  போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்து பின்பு, சிவகங்கை மாவட்டத்தில் அரசு அதிகாரியை அவமரியாதை செய்த சர்ச்சைக்குப் பின்..  அதிரடியாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு மாற்றப்பட்டார் ராஜகண்ணப்பன். வளம் கொழிக்கும் போக்குவரத்துத் துறையில் இருந்தவர் இப்போது வறட்சியான பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் இருப்பதால் மீண்டும் தனக்கு வளமான ஏதேனும் ஒரு துறை கிடைக்குமா என்று முயற்சித்து வருகிறார். ‘தேர்தல் வேற வருது. செலவு பண்றவங்களுக்கு நல்ல துறை கொடுக்கலாமே’ என்ற லாஜிக்கோடு அவரது லாபி ஓடிக் கொண்டிருக்கிறது.

இவர் மட்டுமல்ல முதல்வரின் குட்புக்கில்  இடம்பெற்றிருந்தாலும் தகவல் தொழில் நுட்பத்துறை என்ற லோ பட்ஜெட் துறையில் நாட்களை நகர்த்தி வரும் குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜும் தனக்கு வளமையான துறை கிடைக்குமா என்ற காய் நகர்த்தல்களில் இருப்பதாக கேள்வி.

இந்த அமைச்சர்களுக்கு மத்தியிலே  மூத்த அமைச்சர் ஐ,பெரியசாமிக்கு அவர் இப்போது வகித்து வரும் கூட்டுறவுத் துறை  மாற்றப்பட்டு அதற்கு பதிலாக ஊரக உள்ளாட்சித் துறை கொடுக்கப்படலாம் என்று வலிமையான தகவல்கள் வலம் வருகின்றன. ஆட்சி அமைத்ததும்  அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்த  சீனியரான ஐ.பெரியசாமி தனக்கு கூட்டுறவுத் துறை கொடுக்கப்பட்டதும் வருத்தமடைந்தார். தனக்கு ஒதுக்கப்பட்ட அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் கூட தங்காமல் தனியார் ஹோட்டலில்தான் இதுவரை தங்கி வருகிறார்.  அந்த வருத்தத்தோடு  அமலாக்கத்துறை தொடுத்த வழக்கில் தன்னிடம் விசாரணை நடத்தியும் முதல்வர் அதுபற்றி தன்னிடம் என்ன ஏதென்று கூட கேட்கவில்லையே என்றும் குமுறிக் கொண்டிருந்தார்.  இந்த வருத்தத்தில்தான் பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட்ஸ் போட்டிக்காக சென்னை வந்தபோது வரவேற்குமாறு சொன்ன முதல்வரின் வார்த்தையை மீறி  வரவேற்கவே போகவில்லை ஐ.பி. அதன் பிறகு ஐ.பியை அழைத்த முதல்வர் ஸ்டாலின், ‘அண்ணே கொஞ்சம் பொறுமையா இருங்கண்ணே’ என்று சொல்லியிருக்கிறார்.

கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலின் தென்காசி அரசு விழாவுக்காக  சென்னை எழும்பூரில் இருந்து ரயிலில் புறப்பட்டார். அப்போது  அமைச்சர்கள் ஐ.பெரியசாமியையும், கே.என்.நேருவையும் அழைத்துச் சென்றார். இந்த ரயில் பயணத்தின் போது பெரியசாமி மீண்டும் மனம் விட்டு சில விஷயங்களை முதல்வரிடம் பேசியிருக்கிறார். இந்த பின்னணியில்  சிவகங்கை மாவட்ட அமைச்சர் பெரியகருப்பனிடம்  இருந்து ஊரக உள்ளாட்சித் துறையை எடுத்து ஐ.பெரியசாமியிடமும்… இவரிடம் இருக்கிற கூட்டுறவுத் துறையை பெரியகருப்பனிடமும் கொடுப்பது என்றும் முதல்வர் முடிவு செய்திருப்பதாக தெற்கத்தி வட்டார திமுகவில் திகுதிகுவென பரவி வருகின்றன. எந்த அளவுக்கு என்றால் 14 ஆம் தேதி சென்னை செல்வதற்காக திண்டுக்கல் மாவட்ட திமுக நிர்வாகிகளும் ஐ.பி. ஆதரவாளர்களும் தயாராகி வருகிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் என்ன நினைக்கிறார், என்ன செய்யப் போகிறார் என்பதைப் பொறுத்தே அமைச்சர்களின் இந்த பதற்றத்துக்கு விடை கிடைக்கும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

மாண்டஸ் புயலால் 5 பேர் பலி!

சந்திரமுகி 2 : ஜோதிகா இடத்தில் யார்?

+1
0
+1
2
+1
0
+1
5
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *