டிஜிட்டல் திண்ணை:  இலாகா மாற்றம்: ஒவ்வொரு அமைச்சருக்கும் ஒவ்வொரு காரணம்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் மெசஞ்சரில் மின்னம்பலத்தின் சமீபத்திய சில செய்திகளும், நேற்று (டிசம்பர் 14) வெளியான அமைச்சரவை மாற்றம் பற்றிய அரசு அறிவிப்பும் ஸ்க்ரீன் ஷாட்டுகளாக விழுந்தன. அவற்றைப் பார்த்த வாட்ஸ் அப், 

“உதயநிதிக்கு டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்றும்  இந்த அமைச்சரவை விரிவாக்கத்தோடு மேலும் சில அமைச்சர்களின் துறை மாற்றப்படும் என்றும் மின்னம்பலத்தில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

நேற்று வெளியிடப்பட்ட அமைச்சரவை மாற்றப்பட்டியல் மின்னம்பலம் செய்தியோடு அப்படியே பொருந்திப் போகிறது” என்று ஒரு ஸ்மைலியை அனுப்பி, அடுத்த கட்ட மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது. 

“அமைச்சர்களின் துறைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் சில அமைச்சர்களுக்கு மகிழ்ச்சி, சில அமைச்சர்களுக்கு  வருத்தம். சரி… ஆனால் இந்த துறை மாற்றங்களுக்கு என்ன காரணம் என்பதுதான்  திமுக வட்டாரத்தில் அடுத்து விவாதிக்கப்பட்டு வரும் டாபிக்.

முதலில் உதயநிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறையை தன் வசம் வைத்திருந்த அமைச்சர் மெய்யநாதனிடம் இருந்து அந்த துறை ஏன் பறிக்கப்பட்டது என்று விசாரித்தபோது  சில முக்கியத் தகவல்கள் கிடைத்தன.

அதாவது சுற்றுச் சூழல் அமைச்சகத்தையும்  நிர்வகித்து வரும் மெய்யநாதன் ராம்கோ சிமென்ட் நிறுவனத்துக்கு சுற்றுச் சூழல் தொடர்பான சில க்ளியரன்ஸ் வழங்குவதில் தாமதம் காட்டியிருக்கிறார். இதுபற்றி முதல்வர் வரை கொண்டு சென்ற அந்த நிறுவனத்தினர், அமைச்சர் மீது புகார் வாசித்துள்ளனர்.

இந்தத் தகவல் அறிந்ததுமே அமைச்சர் மெய்யநாதனை அழைத்து எச்சரித்திருக்கிறார் முதல்வர். அமைச்சர் பதவியில் இருந்தே  விடுவிக்கப்படுவார்  என்ற ஹிட் லிஸ்டில் இருந்தார் மெய்யநாதன். ஆனால் இவரது துறைகளில் இருந்து  உதயநிதிக்கு துறை பிரிக்கப்பட்டதால் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்படாமல் தப்பித்தார் மெய்ய நாதன் என்கிறார்கள்.

Portfolio change Every minister has a reason

அடுத்து அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு அமைச்சர் பெரியகருப்பனின் ஊரக வளர்ச்சித் துறையைக் கொடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே  ஐ.பி.க்கு  நல்ல துறை கொடுக்க வேண்டுமென்ற ஆலோசனையில் முதல்வர் இருந்தார்.

ஏற்கனவே  அவர் வகித்த வருவாய் துறையை கொடுக்கலாமா என்றும் ஆலோசனை நடந்தது. ஆனால் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அந்தத் துறையை தற்போது வைத்திருப்பதால் அவரிடம் இருந்து வருவாய் துறையை மாற்ற முதல்வருக்கு எண்ணமில்லை.

இந்த நிலையில்தான்  பெரியகருப்பனின் துறையில் அவரது சம்பந்தி அளவுக்கு மீறி  தலையிடுவதாக புகார்கள் சென்றிருக்கின்றன. அதை ஆராய்ந்து பார்த்த முதல்வர் , பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத் துறையைக் கொடுத்துவிட்டு அவர் வைத்திருந்த ஊரக வளர்ச்சித் துறையை ஐ..பிக்கு கொடுத்திருக்கிறார்.

இதேபோல வனத்துறை ராமச்சந்திரன் அந்தத் துறையில் இருந்து மாற்றப்பட்டு சுற்றுலாத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.

வனத்துறையின் செயலாளராக இருக்கக் கூடிய ஐ.ஏ.எஸ். அதிகாரி சுப்ரியா சாகு தன்னை மதிப்பதே இல்லை என்று  புலம்பிக் கொண்டிருந்திருக்கிறார் அமைச்சர் ராமச்சந்திரன். ரெவியூ மீட்டிங் நடத்தினால் கூட அதற்கு செயலாளரான சுப்ரியா சாகு வருவதே இல்லை என்றும் தன்னை கண்டுகொள்வதே இல்லை என்றும்  வெம்பி வெடித்திருக்கிறார் அமைச்சர் ராமச்சந்திரன்.

இதை  முதல்வரிடம் நேரடியாக  சொல்ல முடியாமல்  முதல்வருக்கு நெருக்கமான சிலர் மூலம்  சொல்லிவிட்டிருக்கிறார். அதேநேரம் அதிகாரிகள் தரப்பில் இருந்து அமைச்சர் ராமச்சந்திரன் பற்றியும் முதல்வரிடம் புகார்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.  இந்த நிலையில் அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் உறவு முற்றிலும் சரியில்லை என்பதால் வனத்துறையில் இருந்து ராமச்சந்திரனை  விடுவித்து சுற்றுலாத் துறையைக் கொடுத்திருக்கிறார் முதல்வர்.

ஏற்கனவே நீலகிரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் சுற்றுலா துறைக்கு அமைச்சராக இருந்தவர்கள் என்பதால்… இந்த முறை சுற்றுலாவை ராமச்சந்திரனுக்கே கொடுத்திருக்கிறார் முதல்வர். வனத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதால் ஏதோ காட்டுக்குள் இருந்து வெளியே வந்து சுற்றுலா போனதுபோல நிம்மதியாக இருக்கிறாராம் ராமச்சந்திரன். ஆனால் இளம் அமைச்சரான மதிவேந்தன் வசம் வனத்துறை வந்து சேர்ந்திருக்கிறது.

அமைச்சரவை மாற்றத்தில் இன்னொரு முக்கியமான மாற்றம்  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு சிஎம்டிஏ துறையைக் கொடுத்திருப்பதுதான்.  2010 இல் சேகர்பாபு திமுகவுக்கு வந்ததில் இருந்து திமுக ஆளுங்கட்சியாகவே ஆக முடியவில்லை.

11 வருடங்கள் காத்திருந்து திமுகவுக்காக நிறைய செலவு செய்து 2021 இல் அமைச்சரானார் சேகர்பாபு.  வளமையான துறை கிடைக்கும் என்று காத்திருந்தவருக்கு அறநிலையத்துறை கிடைத்ததால் அப்போதே பெரும் வருத்தம். ஆனாலும் தான் இயல்பாகவே ஆன்மீக வாதி என்பதால் அறநிலையத்துறையில்  ஈடுபாடாக வேலை செய்தார். ஆனாலும் தனக்கு கூடுதல் துறை வேண்டும் என்பதற்கான முயற்சிகளை அவ்வப்போது அவர் மேற்கொண்டே வந்தார்.

என்னதான் முதல்வர் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவராக சேகர்பாபு இருந்தாலும்  கூடுதல் துறையை அவரால் பெற முடியவில்லை. இதேநேரம் சென்னை மாநகரத்தில் திமுகவின் வலுவான தூணாக தன்னை நிலைநிறுத்திவிட்டார் சேகர்பாபு.  கட்சி நிகழ்ச்சிகளானாலும் சரி,  அரசு நிகழ்ச்சிகளானாலும் சரி சேகர்பாபுவின் ஸ்பீடை ஸ்டாலின் பல முறை பாராட்டியிருக்கிறார்.

இந்த நிலையில்தான் சேகர்பாபுவின் உழைப்புக்கும் சென்னையில் அவரது கட்சிப் பணிக்கும் அங்கீகாரம் கொடுக்கும்படி சிஎம்டிஏவை சேகர்பாபுவிடம் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். இதனால் சென்னையில் சேகர்பாபுவின் கிராஃப் ஏறியுள்ளது.  

துறை ரீதியான மாற்றங்களில ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பது ராணிப்பேட்டை காந்தியிடம் இருந்து காதி கிராம தொழில் வாரியத்தை  எடுத்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் கண்ணப்பனிடம் கொடுத்திருப்பதுதான். போக்குவரத்துத் துறையை வைத்திருந்த கண்ணப்பன் சில மாதங்களுக்கு முன் சாதி சர்ச்சையில் சிக்கியதால் அவரிடம் இருந்த போக்குவரத்துத் துறை பறிக்கப்பட்டு சிவசங்கரிடம் தரப்பட்டது.

அவரிடம் இருந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை  கண்ணப்பனிடம் கொடுத்தார் முதல்வர். அப்போது முதல் கடுமையான அப்செட்டில் இருக்கிறார் ராஜ கண்ணப்பன். அமைச்சரவை மாற்றம் என அரசல் புரசலாக தகவல் வந்தவுடன்….தனக்கு கூடுதல் துறை வேண்டும் என்று கடுமையாகவே முயற்சி செய்தார் கண்ணப்பன். முதல்வருக்கு வேண்டியப்பட்டவர்களையே நேரில் சந்தித்து, ‘இந்த துறையை வச்சிக்கிட்டு மரியாதையே இல்லைங்க.  எனக்கு ஏதாச்சும் ஒரு கூடுதல் துறையைக் கொடுங்க’ என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார் கண்ணப்பன்.

வேறு எந்த துறையையும் கண்ணப்பனிடம் கொடுக்க விரும்பாத முதல்வர்  தனக்கு மிகவும் நெருக்கமான ராணிப்பேட்டை காந்தியிடம் இருந்து காதித் துறையை எடுத்து கண்ணப்பனிடம் கொடுத்திருக்கிறார்.  இதில் கண்ணப்பனுக்கும் திருப்தி இல்லை.  காந்திக்கும் வருத்தம் என்கிறார்கள்.

நிதியமைச்சர் பிடிஆருக்கு கூடுதலாக புள்ளியியல் துறை கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஐ.பெரியசாமியிடம் இருந்த இந்தத் துறையை யாரிடம் கொடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டபோது…  புள்ளியியல் மீது ஆர்வமும் ஈடுபாடும்  கொண்ட பிடிஆர் ஏற்கனவே புள்ளிவிவரங்கள் பற்றி நிறைய பேசியிருப்பதை அறிந்த முதல்வர் இது பிடிஆரிடம் இருப்பதே பொருத்தமாக இருக்கும் என்று பிடிஆரிடம் கொடுத்துவிட்டார்.

இப்படி ஒவ்வொரு துறை மாற்றத்துக்கும் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிரடி ப்ளான்!

டாப் செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *