தமிழகம் முழுவதும் பொது இடங்களில் “மாதவிடாய் அறை” (Period rooms) அறிமுகப்படுத்த வேண்டும் என்று திமுக சுற்றுச்சூழல் அணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான டாக்டர்.பூங்கோதை ஆலடி அருணா இன்று (ஆகஸ்ட் 30) தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் “பதின்பருவ மகளிர் சூழலியல் விழிப்புணர்வு மற்றும் மாதவிடாய் கால மறுபயனீடு பெட்டகம்” வழங்கிடும் நிகழ்ச்சி வடசென்னை ராயபுரத்தில் பூங்கோதை ஆலடி அருணா தலைமையில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஐ், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா பேசும்போது “இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பெண்களுக்கு இயல்பாக நடக்கக்கூடிய மாதவிடாய், தவறான மூடநம்பிக்கைகள் நிறைந்த ஒருபிரச்சனையாக கருதப்படுகிறது .
பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றத்தை பெற்றோரிடமே பேச தயங்கும் போது, பாலியில் வன்கொடுமை சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டால் எப்படி தைரியமாக பேசுவார்கள்?
இத்தகைய மனத்தடையை போக்கவும் , மாதவிடாய்கால சுகாதாரம் வாயிலாக எவ்வாறு அவர்களையும் , பூமி தாயையும் பாதுகாத்திடலாம் என்பதனை உணர்த்தவே இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றோம்.
முக்கியமாக இந்தியா போன்ற கீழ்-நடுத்தர , குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் மாதவிடாய் சுகாதாரத்தை சரியாக அமல்படுத்த முடியவில்லை.
சுத்தமற்ற துணிகள், தவறான பயன்பாட்டு முறைகள் , தண்ணீர் , கழிப்பறை , குப்பை தொட்டிகள் போன்ற வசதியின்மை போன்ற காரணங்களால் பெண்களின் நலமும் பூமித்தாயின் நலமும் பெரிதும் பாதிக்கப்படுகின்றது.
நெகிழி பட்டைகளால் நிலம், நீர், காற்று மாசுபடுகிறது . இதனால் வயிற்று போக்கு , கல்லீரல் தொற்று , சரும பாதிப்பு , புற்று நோய் போன்ற வியாதிகளால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
அசுத்தமான துணி, சுகாதார பட்டையை குறைந்த பட்சம் 6 மணி நேர்த்தில் மாற்றாத காரணத்தால் சிறுநீர் தொற்று , சிறுநீரகங்கள் பாதிப்பு , கர்ப்பப்பைதொற்று, குழந்தையின்மை போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கிறது .
சுமார் 30% வளரிளம் பெண்கள் மாதவிடாய் நாட்களில் 3-5 நாட்கள் பள்ளிகளுக்கு செல்லாததால் அவர்கள் படிப்பில் பின்தங்கி உள்ளனர் என ஆய்வுகள் கூறுகின்றன.
மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் மாநில சுற்றுச்சூழல் அணி சார்பில் நடத்தப்படும். ஆதி திராவிடநலத்துறை சார்ந்த பள்ளிகளில் மறுசுழற்சி சுகாதார பட்டை அறிமுகம் செய்திட வேண்டும், நெகிழி அல்லது ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பள்ளிகளில் சிறப்பு சுகாதார பட்டை எரியூட்டிகளை அமைத்திட வேண்டும் என்பதை அமைச்சர் கயல்விழியிடம் கோரிக்கையாக வைக்கிறேன்.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலக வளாகங்கள், ரயில் , பேருந்து , விமான நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஒதுங்கும் அறைகள் இருப்பது போல “ மாதவிடாய் அறை” (Period rooms) அறிமுகப்படுத்திட முதல்வர் ஸ்டாலினுக்கு இந்நிகழ்ச்சியின் வாயிலாக கோரிக்கை வைக்கிறேன்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
Paris Paralympics: அடுத்தடுத்து 4 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா… மோடி வாழ்த்து!