சிறப்புக் கட்டுரை: பொன்னியின் செல்வன், பெண்களின் செல்வன் ஆக காரணம்!

அரசியல்

பொன்னியின் செல்வன் நாவல் கல்கியால் எழுதி வெளியிடப்பட்டது 1950 களில். இப்போது  70 ஆண்டுகள் கடந்த பின்னரும் பொன்னியின் செல்வன் ஏன் இவ்வளவு ருசிகரமாக விவாதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு கதாபாத்திரமும்  ஏன் இவ்வளவு கொண்டாடப்படுகிறது. ஒரு படைப்பு எழுபது ஆண்டுகளுக்குப்  பின்னரும் கிட்டத்தட்ட மூன்று, நான்கு தலைமுறைகளைக் கடந்து தாத்தா பாட்டி முதல் பேத்தி பேரன் வரை  இவ்வளவு ஈடுபாட்டோடு பேசப்பட வேண்டிய காரணம் என்ன?

கல்கியின் தனித் தமிழ்

50 களில் சோழ வரலாறு உள்ளிட்ட வரலாற்றுப் புனைவுகள் பெரிதாக இல்லை.  இன்னும் சொல்லப் போனால் 1950 களில் தமிழ்  ஊடக உலகமோ படைப்புலகமோ  வடமொழிக் கலப்புகளை அதிகமாகவே பெற்றிருந்தது. அதாவது அன்றைய காலகட்டங்களில் வெளியான படைப்புகளில் மணிப்பிரவாளம் என்னும் வடமொழி கலந்த நடையே ஆக்கிரமித்திருந்தது.

ஆனால் பொன்னியின் செல்வன் நாவலை கல்கி தனித் தமிழில் எழுதியிருப்பார். நெருடலான சமஸ்கிருத சொற்களோ சொற்கட்டோ  இதில் இல்லை. உரைநடைத் தமிழ்தான் என்றாலும் எளிமையான தமிழை பயன்படுத்தியிருக்கிறார் கல்கி.

ஆனால் கல்கி, பொன்னியின் செல்வன் கதையை பெரும்பாலும் தனித் தமிழில்தான் எழுதியிருக்கிறார்.  அதனால் தமிழில் வாசிக்கிறவர்களுக்கு எந்த இடத்திலும் கரடு தட்டாமல் சீரான நீரோட்டமாக அமைந்திருக்கும் அவரது தமிழ் மொழியோட்டம்.

இந்த நாவலின் தலைப்பான பொன்னியின் செல்வனே தூய தமிழ்தான். பொன்னி என்றால் என்ன? காவிரி ஆடி மாதத்தில் புதுப் புனலாக பெருக்கெடுத்து ஓடிவரும். அப்போது காவிரி நீர் பொன்னிறத்தில் தகதகக்கும்.

பொன்னிறத்திலான புதுப்புனல் காவிரிக்குதான் பொன்னி என்று தமிழில் பெயர்.  இதுமட்டுமல்ல்லாமல் தமிழ்ப் பண்பாட்டில் பொதுவாக எந்த நதியாக இருந்தாலும் புதுப்புனலாக பொங்கி வரும்போது அதற்குப் பெயர் பொன்னி என்றுதான் வழங்கப்படும்.

அதனால்தான் பொன்னி என்பது நீர் கடவுளாகவே தமிழர்  பண்பாட்டில் நிலைபெற்றது. பொன்னியம்மன் கோயில் என்று இருப்பதையெல்லாம் தேடிப் பாருங்கள். நீர் நிலைகளின் ஓரமாகவே அமைந்திருக்கும்,  இந்த வகையில் பின்னால்  பொன்னி என்றாலே காவிரியைதான் குறிக்கும் பெயராக ஆகிப் போனது.

அதனால் காவிரியின் மைந்தன் என்று  ராஜராஜனை குறிக்கும் வகையில்தான் நாவலுக்கு பொன்னியின் செல்வன் என்று தூய தமிழில்தான் வைத்தார் கல்கி. தலைப்பை மட்டுமல்ல… நாவல் முழுதும் தமிழ் பொங்கிப் புனலாக வழியும். அதனால்தான் சரளமாக தமிழ் படிக்கத் தெரிந்த அனைவருமே பொன்னியின் செல்வனில் மயங்கினார்கள்.

பெண்களின் செல்வனாக மாறிய காரணம் என்ன?

சினிமாக்களில் வயது வந்தவர்கள் மட்டும் பார்ப்பதற்கு ஏ என்றும் அனைத்து தரப்பினரும் பார்ப்பதற்கு யூ என்றும் சான்றிதழ்  கொடுப்பார்கள். அதுபோல பொன்னியின் செல்வன்  தமிழில் வயது வரம்பின்றி அனைத்து தரப்பினரும் படிப்பதற்கான ஏற்ற நாவலாக அமைத்தார் கல்கி.

இந்த நாவல் வெளிவந்த காலகட்டங்களில் தமிழில் வரலாற்றுப் புனைவுகள் குறைவு. அதிலும் சாண்டில்யன் போன்ற எழுத்தாளர்கள் வரலாறு என்ற  முலாமை பூசிக் கொண்டு முழு புனைவுகளையே எழுதி வந்தனர்.

அந்த புனைவுகளும் அனைவரும் படிக்கும் வகையிலான புனைவுகளாக இருக்காது. சாண்டில்யனின் எழுத்தில் பெண்களைப் பற்றிய வர்ணனைகளை படித்து அந்த காலத்து வாலிபர்கள் கிறுகிறுத்துப் போய் கிடந்தார்கள். அதனால் சாண்டில்யனின் புத்தகங்களை அப்பா தன்  மகனுக்கு  பரிந்துரைக்க முடியாத அளவுக்கு  அந்த எழுத்து ஹார்மோன்கள் அதிகமாகவே  இசைக்கப்பட்டன.

ஆனால் கல்கியின்  பொன்னியின் செல்வன் குடும்பத்தில் அனைவருக்கும் சமுதாயத்தில் அனைவருக்கும்  பொதுவான செல்வன் ஆனான். காரணம் கல்கி அதை கையாண்ட விதம். எழுத்துகளில் காட்டிய நயம். சோழர்களின் வரலாற்று நெடுஞ்சித்திரமான பொன்னியின் செல்வன் நாவலில் ஆவேசமான வீரம், உறுதியான காதல், சோழப் பேரரசுக்கு எதிரான சதிகள்,  ஆலோசனைத் திட்டங்கள் என  தமிழர்களின் பண்பாடான அகம், புறம் இரண்டையும்  ஒருசேரத் தந்தார் கல்கி.

நந்தினியின் அழகு பற்றி வர்ணித்தபோதும் கல்கியிடம் எங்கும்  சாண்டியல்யனின் ’ஹேண்டில்யம்’ இல்லை.  மிக நேர்த்தியாக மிக தரமான காதல் உணர்வுகளை அழகுத் தமிழில் சித்திரித்து,  அந்தரங்க விஷயங்களை கூட அளவாக தூவியிருந்தார் கல்கி. இதுதான்  பொன்னியின் செல்வன் இன்று வரையும் பெண்களின் செல்வனாக நிமிர்ந்து நிற்கக் காரணம்.

பொன்னியின் செல்வன் வாசித்த பலருக்கும்  அதை அறிமுகப்படுத்தியது அவர்களது அம்மாவாகவோ அப்பாவாகவோதான் இருப்பார்கள். கல்கியின்  மிக நிதானமான எங்கேயும் வரம்பு தாண்டாத அந்த தமிழ்தான்  பொன்னியின் செல்வனை இன்றும் பொதுமைச் செல்வனாக நம்முள் நிறுத்தியிருக்கிறது.

வரலாற்றையும்  புவியியலையும் இணைத்த புள்ளி

அதுமட்டுமல்ல  சாண்டியல்யன் போன்றோரின்  நாவல்களில் கடகத் தீவு  போன்ற புனைவுப் பெயர்களே அதிகம் இருக்கும். அதாவது  அவற்றை படித்தால் எல்லா இடத்திலும் அதீத கற்பனைதான் இருக்கும்.

அதனால் அதற்குள் வாசகரால் தன்னை முழுமையாக பொருத்திப் பார்க்க இயலாது. அதேநேரம் கல்கியின் பொன்னியின் செல்வனின் அனைத்து அத்தியாயங்களை படிக்கும்போதும் நாம் அந்த கதைக்குள், கதை நடக்கும் இடங்களுக்குள்  நம்மை அறியாமலேயே பயணம் செய்துகொண்டிருப்போம்.

கதையின் ஆரம்பமே வீராணம் ஏரிக் கரையில் வந்தியத் தேவன் குதிரையில் செல்வதாகத்தான் அமைந்திருக்கும். அதன் பின் கதை விரிந்து விரிந்து நாகப்பட்டினம், தஞ்சாவூர், காஞ்சிபுரம், இலங்கை என்று நாம் இன்று வாழும்  பகுதிகளுக்குப் பயணம் செய்யும். கொள்ளிடம் கரையில் ஒரு குக்கிராமத்தில் பிறந்த கல்கி சோழ மன்னர்களின் கதையைச் சொல்லும்போது புவியியல் ரீதியாகவும் நம்மை பொருத்திவிட்டார்.

அதனால்தான் இத்தனை ஆண்டுகள் ஆகியும் பொன்னின் செல்வன் நாவல் உயிரோட்டமாக இருப்பதும், அதன் சினிமா வடிவத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதும் நம் கண்முன்னே நடக்கிறது.

இன்றும் பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து வந்தியத் தேவனோடு ஒரு பயணம் போகலாம் வாருங்கள் என்று தமிழ்நாடு சுற்றுலாத்துறையும் பல்வேறு நிறுவனங்களும் பொன்னியின் செல்வன் சுற்றுலா திட்டம் அறிவித்து நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றால் அது வரலாற்றையும் புவியியலையும் இணைத்த கல்கியின் வெற்றி.

வரலாற்றையும் புவியியலையும் இணைக்கும் முக்கியமான புள்ளிதான் பொன்னியின் செல்வன்.
 
பொன்னியின் செல்வன்  வெறும் வாசகர்களை மட்டும் உருவாக்கவில்லை. வாசகர்களை வரலாற்று ஆர்வலர்களாக மாற்றி அதில் கணிசமானோரை வரலாற்று ஆய்வாளர்களாகவும் முன்னேற்றியிருக்கிறது.

வேந்தன்

பொன்னியின் செல்வனுக்காக எம்ஜிஆர் போராடியது ஏன்?

பொன்னியின் செல்வன்: கல்வெட்டுகளும் கல்கியின் கற்பனையும்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.