எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக தான் பேசியதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய ஆடியோவில் இருப்பது தன்னுடைய குரல் அல்ல என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார்
சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் அவரது ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி நேற்று இரவு (ஜூலை 12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் கோலப்பனுடன் அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், ”தொண்டர்கள் இரட்டை இலை பக்கம் இருக்கிறார்கள். தலைவர்கள் பணம் பக்கத்தில் நிற்கிறார்கள். தங்கமணி தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஸ்டாலின் பக்கம் சாய்ந்து வருகிறார். அதே மாதிரி கே.பி. முனுசாமியும் ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார்.
பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ்ஐ சமதானம் செய்துவிடலாம் என்று எடப்பாடி நினைத்திருந்தார். ஆனால் அவருக்கு ஆதரவாக எம்எல்ஏக்கள் இல்லை. எடப்பாடி ஆதரவு அணியில் 42 கொங்குநாடு எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு 9 எம்.எல்.ஏ. க்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. மற்றவர்கள் எல்லாம் காசு கொடுக்கும் வேலுமணி, தங்கமணி கைகளில் இருக்கிறார்கள். அதனால் வேறு வழியில்லாமல் தனது பதவியைக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.
இதற்கிடையே ஒற்றைத் தலைமைக்கு வர கே.பி.முனுசாமி முயற்சி மேற்கொண்டு வருகிறார். அம்மா, கட்சி எல்லாத்தையும் விட்டுவிட்டு ஜாதி, பணத்திற்கு பின்னால் எல்லோரும் ஓடிக் கொண்டு இருக்கிறார்கள்” என்று பொன்னையன் கூறுவதுபோல உள்ளது. இந்த ஆடியோ வெளியான நிலையில் அதிமுகவில் குறிப்பாக இபிஎஸ் ஆதரவாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், தற்போது வெளியான ஆடியோவில் எடப்பாடி பழனிசாமி குறித்து தான் பேசியதாக கூறப்படும் குரல் தன்னுடையதல்ல என்று அதிமுக அமைப்புச் செயலாளர் பொன்னையன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ”எந்த கோலப்பனிடமும் நான் பேசவில்லை. ஆடியோவில் பேசியிருப்பது நான் அல்ல. அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் தனது குரல் போன்றே மிமிக்ரி செய்யப்பட்டு அதில் பேசப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உண்மைக்கு மாறானது.” என்று தெரிவித்தார்.
–கிறிஸ்டோபர் ஜெமா