பிற்பகல் 3.30 மணிக்கு ’அமைச்சர்’ ஆக பதவி ஏற்கிறார் பொன்முடி
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவிக்கு ஒரு நாள் உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்திருந்தது. இந்த நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்க வருமாறு பொன்முடிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால் அவரது எம்எல்ஏ பதவி திரும்பக் கிடைத்தது.
அதேவேளையில், பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்குமாறு உச்சநீதிமன்ற தீர்ப்பு நகலுடன் முதல்வர் ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்தார்.
இதையடுத்து பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ரவிக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீது நேற்று மதியம் விசாரணை நடத்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு “பொன்முடியின் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துவிட்டது. அதன் பிறகு பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க முடியாது என ஆளுநர் ரவி மறுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது? உச்சநீதிமன்றத் தீர்ப்பை, ஆளுநர் ஆர்.என்.ரவி மீறிவிட்டார்” என அந்த அமர்வு காட்டமாக தெரிவித்தது.
மேலும் பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி முடிவெடுக்க 24 மணி நேரம் அவகாசம் வழங்குவதாகவும், அதற்குள் ஆளுநர் தனது முடிவை தெரிவிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்து நேற்று மாலையே பொன்முடிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என தகவல்கள் வெளியான நிலையில், இன்று காலை வரை பதவிப்பிரமாணம் செய்து வைப்பதற்கான எந்த ஏற்பாடுகளும் ஆளுநர் மாளிகையில் செய்யப்படவில்லை.
இந்த வழக்கு இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ள நிலையில் ஆளுநர் தரப்பில் எந்த முடிவும் எடுக்காதது பரபரப்பை ஏறபடுத்தியது.
இந்த நிலையில் அமைச்சராக பதவியேற்க பொன்முடிக்கு ஆளுநர் தரப்பில் தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர்.
முதல்வர் ஸ்டாலின் தனது நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக இன்று மாலை திருச்சி செல்கிறார். எனவே அதற்கு முன்னதாக முதல்வர் முன்னிலையில் பொன்முடி அமைச்சராக பதவியேற்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000… ’நீட்’டுக்கு மாற்றுத் தேர்வு : அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!
REBEL: எப்படி இருக்கிறது?… ரசிகர்கள் விமர்சனம்!