பொன்முடி வழக்கின் தீர்ப்பு நகல் வெளியானதை தொடர்ந்து அவர் மீண்டும் எம்.எல்.ஏ.வாக தொடர்வார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Ponmudi will continue as MLA again
சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்ததால் உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி எம்.எல்.ஏ. பதவியை இழந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் கடந்த மார்ச் 11ஆம் தேதி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது. இதனால் மீண்டும் பொன்முடி எம்.எல்.ஏ.வாகும் வாய்ப்பு ஏற்பட்டது.
பொன்முடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு தொடர்பாக சட்ட ரீதியான, அரசியல் ரீதியான ஆலோசனைகளை முதல்வர் ஸ்டாலின் நடத்தினார்.
பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்த உத்தரவு பற்றிய அதிகாரபூர்வமான கடிதம், உச்ச நீதிமன்றத்தில் இவ்வழக்கில் வாதாடிய தமிழ்நாடு அரசுத் தரப்பு வழக்கறிஞர் குமணனிடம் இருந்து தமிழக அரசின் பொதுத் துறை செயலகத்துக்கும், சட்டப்பேரவை செயலகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவு, சட்டப்பேரவை முதன்மை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.
பிறகு, முழு தீர்ப்பு நகல் வந்தவுடன் பொன்முடியை மீண்டும் அமைச்சராக்கும் முதல்வரின் சிபாரிசை ஆளுநருக்கு அனுப்பலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மின்னம்பலத்தில், மீண்டும் அமைச்சராகும் பொன்முடி… ஆளுநருக்கு கடிதம்? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இதற்கிடையே வயநாடு எம்.பி.ராகுல் காந்தி, லட்சத்தீவு எம்.பி முகபது பைசல், உத்தரப் பிரதேசம் காசிப்பூர் எம்.பி.அன்சாரி ஆகியோருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதே சட்டப்படி பொன்முடி விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பின் நகல் இன்று (மார்ச் 13) வெளியானதை தொடர்ந்து மீண்டும் எம்.எல்.ஏ.வாக பொன்முடி தொடர்வார் என்று சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.
அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானது என தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதமும் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
GOAT: படத்தில் ‘டாப் ஸ்டார்’ நடிப்பதற்கு காரணம் இதுதான்!
தேர்தல் பத்திர விவரங்கள் எப்போது வெளியாகும்?: தலைமைத் தேர்தல் ஆணையர் பதில்!