Ponmudi who lost his MLA post

டிஜிட்டல் திண்ணை: எம்.எல்.ஏ. பதவி இழந்த பொன்முடி… ஜெயலலிதா, ராகுல் வழக்குகள் சொல்வது என்ன?

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுவிக்கப்பட்டது செல்லாது, அவர் குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த விவரம் இன்பாக்சில் வந்து விழுந்தது. Ponmudi who lost his MLA post

இது தொடர்பாக  வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“2006-2011 அமைச்சராக இருந்த பொன்முடியும் அவரது மனைவி விசாலாட்சியும் வருமானத்துக்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக 2011 இல் அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் இருந்து பொன்முடியும் அவரது மனைவியும் 2016 ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து 2017 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல் மனு மீது விசாரணை நடத்திய உயர் நீதிமன்றம் கடந்த மாதம் விசாரணை முடிந்து தீர்ப்பை ஒத்தி வைத்தது. அந்தத் தீர்ப்புதான் இன்று டிசம்பர் 19 ஆம் தேதி நீதிபதி ஜெயச்சந்திரனால் அளிக்கப்பட்டது.

பொன்முடி, அவரது மனைவி ஆகியோரை சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது செல்லாது என்றும், அவர்கள் குற்றவாளிகள்தான் என்றும் தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை விவரம் பற்றி 21 ஆம் தேதி தெரிவிப்பதாகவும் அப்போது பொன்முடி, அவரது மனைவி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பின் போது விழுப்புரத்தில் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் பொன்முடி, விவரம் அறிந்ததும் தன் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து சென்னையில் சில முக்கிய வழக்கறிஞர்களைத் தொடர்புகொண்டு பேசியவர் தனது தேசிய கொடி பொருத்திய காரை விட்டுவிட்டு, வேறு ஒரு காரில் சென்னைக்குப் புறப்பட்டார்.

பொன்முடி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், அவரது தண்டனை என்ன என்பதைப் பொறுத்தே அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி இழப்பார் என்று திமுக தரப்பிலேயே பேச ஆரம்பித்தனர். அதாவது மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி இரு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றால் உடனடியாக எம்.எல்.ஏ. அல்லது எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

அப்படித்தான் சில மாதங்களுக்கு முன் அவதூறு வழக்கு ஒன்றில் ராகுல் காந்தி இரு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதை சொல்லி திமுகவினர் 21 ஆம் தேதி பொன்முடிக்கு என்ன தண்டனை என்ற விவாதத்தில் இறங்கியுள்ள்னர்.

ஆனால் அரசியல் சாசன வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசியபோது, ‘மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி மக்கள் பிரதிநிதிகளின் தகுதி இழப்பு என்பது 25 வகைகளுக்கு மேல் இருக்கிறது. அதில் ஒன்றுதான் குற்ற வழக்குகளில் குறைந்தபட்சம் இரு வருட தண்டனை பெற்றால் தகுதி நீக்கம் என்பது. ஆனால் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டாலே அவரது மக்கள் பிரதிநிதி என்ற நிலையை இழந்துவிடுவார்.

அந்த வகையில் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அமைச்சர் பொன்முடி அறிவிக்கப்பட்டபோதே அவர் எம்.எல்.ஏ. பதவியை இழந்துவிட்டார். அதனால்தான் அவர் விழுப்புரத்தில் இருந்து தனிப்பட்ட காரில் சென்னைக்கு பயணமானார் என்கிறார்கள். இதற்கு சில உதாரணத்தையும் கூறுகிறார்கள் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில்.

டான்சி நில பேரம் தொடர்பான இரண்டு வழக்குகளில் கடந்த 2000 ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை சிறப்பு நீதிமன்றம், ஒரு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகளும் மற்றொரு வழக்கில் 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்தது. 96 தேர்தலில் தோல்வி அடைந்த ஜெயலலிதா, அப்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லை.

ஜெயலலிதா அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. 2001 தேர்தலில் புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிப் பட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தபோதும் தேர்தலில் போட்டி யிட தகுதியில்லை என்று கூறி அவரது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். ஆனால் அந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் வெற்றி பெற்றது.

தேர்தலில் போட்டியிட தகுதி இல்லாத நிலையில் இருந்த ஜெயலலிதா அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக அதாவது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து, அப்போது ஆளுநராக இருந்த பாத்திமா பீவியிடம் ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார். பலரும் ஜெயலலிதாவை ஆட்சி அமைக்க அழைக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், ஆளுநர் பாத்திமா பீவி ஜெயலலிதாவை பதவியேற்க அழைத்தார். 2001-ம் ஆண்டு மே 14-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார் ஜெயலலிதா.

இதை எதிர்த்து பலரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றது செல்லாது என 2001 செப்டம்பர் 21 ஆம் தேதி தீர்ப்பளித்தது. உடனடியாக பதவி விலகினார் ஜெயலலிதா. அப்போது ’ஊழல் தடுப்புச் சட்டப்படி குற்றவாளி என்று நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் பொது ஊழியராக இருக்க முடியாது’ என்ற ரீதியில்தான் அன்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

அதுமட்டுமல்ல சில மாதங்களுக்கு முன் ராகுல் காந்தி அவதூறு வழக்கு ஒன்றில் இரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டார். உடனடியாக அவரது எம்பி பதவி மக்கள் பிரநிதித்துவ சட்டப்படி பறிக்கப்பட்டது. ஆனால் ஊழல் வழக்கு அல்லாத அவதூறு வழக்கு என்பதால் அவரது தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததும் மீண்டும் அவருக்கு எம்பி பதவி கிடைத்துவிட்டது.

ஆனால் ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தண்டனை நடைமுறைக்கு வருவதை நிறுத்தி வைக்க முடியுமே தவிர அவர் குற்றவாளி என்ற நிலையை நிறுத்தி வைக்க முடியாது. அது மேல் முறையீட்டில் உச்ச நீதிமன்றத்தின் கையில்தான் இருக்கிறது.

ஆனால் அதுவரை மக்கள் பிரநிதியாக இருக்க முடியாது என்ற அடிப்படையில் டிசம்பர் 19 காலை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த அடுத்த நொடியே பொன்முடி எம்.எல்.ஏ.பதவியை இழந்துவிட்டார் என்று அரசியல் சாசன வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் திமுக உயர் மட்ட வழக்கறிஞர்களோடு இன்று மாலை பொன்முடி ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் இருந்து நாளை காலைதான் தமிழகம் திரும்புகிறார். டிசம்பர் 21 ஆம் தேதி பொன்முடி நீதிமன்றத்தில் ஆஜராகும் முன்பே அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IPL 2024 auction : டாப் 10 வீரர்கள் விவரம்!

ரச்சின் முதல் ராவ் வரை: சிஎஸ்கே ஏலம் எடுத்த வீரர்களின் முழு பட்டியல் இதோ!

Ponmudi who lost his MLA post

+1
0
+1
1
+1
1
+1
7
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *