அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சூமோட்டா வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் 8 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.
திமுக துணைப் பொதுச்செயலாளரும் உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
அப்போது, தனது பதவியை முறைகேடாக பயன்படுத்தி ரூ.1.36 கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2001ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில், பொன்முடி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை விழுப்புரம் மற்றும் வேலூர் மாவட்ட நீதிமன்றங்களில் நடைபெற்றது. இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்கு வேலூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது “போதுமான ஆதாரங்கள் இல்லை” எனக்கூறி அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து மறு ஆய்விற்கு எடுத்தார். மேலும், “அமைச்சர் பொன்முடிக்கு எதிரான இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை முறையாக நடைபெறவில்லை” எனக் குற்றம்சாட்டினார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்ததை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடினார். ஆனால், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை முறைப்படி சந்திக்குமாறு பொன்முடிக்கு அறிவுறுத்தியது.
இந்தநிலையில், பொன்முடிக்கு எதிரான சூமோட்டோ வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தன் முன்பு உள்ள அரசு விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்துவிட்டு, பொன்முடி வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறி, 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
US Open 2024: பட்டம் வென்று ஜன்னிக் சின்னர், அரியானா சபலென்கா சாதனை!
“வருங்கால தமிழகத்தை வழிநடத்தக்கூடியவர் உதயநிதி” – அமைச்சர் மூர்த்தி