ஆளுநரின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 6) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்முடி, “சிண்டிகேட் செனட் கூட்டங்கள் தலைமை செயலகத்தில் நடைபெறுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார். சிண்டிகேட் செனட் கூட்டங்கள் அந்தந்த பல்கலைக்கழகங்களில் தான் நடைபெறுகிறது.
கொரோனா காலத்தில் மட்டும் ஆன்லைன் மற்றும் தலைமை செயலகத்தில் சில கூட்டங்கள் நடத்தப்பட்டது. ஆளுநர் மாளிகையில் துணை வேந்தர்களுடன் ஆர்.என்.ரவி ஏன் கூட்டம் நடத்தினார்?.
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்பட அனைத்து துறைகளிலும் ஆளுநர் ஆதிக்கம் செலுத்துகிறார். நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் பட்டமளிப்பு விழா நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் செயல்பாட்டை மக்கள் புரிந்துள்ளனர். அவரின் அரசியல் தமிழகத்தில் எடுபடாது. துணை வேந்தர்கள் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக விதிப்படி சிண்டிகேட் உறுப்பினர், அரசு உறுப்பினர், ஆளுநர் நியமிக்கும் உறுப்பினர் என மூவரை தேர்வு செய்து அவருக்கு அனுப்பி வைத்தோம். ஆனால் யுஜிசி உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என கூறுகிறார்” என்று பொன்முடி தெரிவித்தார்.
செல்வம்