தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சராக தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் இன்று (டிசம்பர் 21) அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், குற்றவாளி என்பதற்கு எந்தத் தடையும் இல்லாத நிலையில் அவரது அமைச்சர் பதவியும் சட்டமன்ற உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொன்முடி வகித்து வந்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு, கூடுதல் பொறுப்பாக தற்போதைய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சரான ராஜ கண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
பொன்முடியின் அமைச்சர் பதவி யாருக்கு? என்ற தலைப்பில் நேற்று மின்னம்பலத்தில் வெளியான செய்தியில், ‘பொன்முடியின் உடையார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு அவரது துறை ஒதுக்கப்படும் என்று கட்சி அளவில் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. ஆனாலும் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது நடந்ததைப் போல பொன்முடியின் துறையை வேறு அமைச்சரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தோம்.
அதேபோல இப்போது பொன்முடியிடம் இருந்த உயர் கல்வித் துறை, அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…