முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பொன்முடி
Ponmudi met Chief Minister Stalin
சொத்துக் குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று(டிசம்பர் 21) உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக டிசம்பர் 19 ஆம் தேதி பொன்முடியும் அவரது மனைவியும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் டெல்லியில் இருந்தார். பொன்முடியோ விழுப்புரத்தில் இருந்தார்.
19 ஆம் தேதி பகலில் பொன்முடி விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தார். டெல்லியில் இருந்த ஸ்டாலின் 19ஆம் தேதி இரவு பிரதமர் மோடியை சந்தித்துவிட்டு 20ஆம் தேதி காலை தான் சென்னை வந்தார்.
இந்நிலையில், முதல்வரும் கட்சித் தலைவருமான ஸ்டாலினை, பொன்முடி சந்தித்தாரா என்பது திமுக நிர்வாகிகள் மத்தியில் விவாதமானது.
குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதிப்படுத்தியிருந்த நிலையில், பொன்முடியை முதல்வர் ஸ்டாலின் சந்திப்பாரா என்ற விவாதமும் திமுக நிர்வாகிகளிடையே எழுந்தது.
இந்த நிலையில் இருவரும் சென்னையில் சந்தித்தார்களா இல்லையா என்பது குறித்து விசாரித்தோம்.
நேற்று காலை சென்னை வந்ததுமே காமராஜர் சாலையிலுள்ள எழிலகத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
அங்கிருந்தபடியே தென் மாவட்ட வெள்ளம் குறித்து நான்கு மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே சென்னை வந்துவிட்ட ஸ்டாலினை நேரில் சென்று சந்திக்க முயற்சித்தார் பொன்முடி. முதல்வரின் உதவியாளருக்கு பொன்முடியே போன் செய்து, ‘தலைவரை பார்க்கணும்’ என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு முதல்வரின் உதவியாளர், ‘நான் கேட்டுட்டு உங்ககிட்ட சொல்றேன்’ என்று பதிலளித்திருக்கிறார்.
பொன்முடி போன் செய்தது பற்றி முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கொஞ்ச நேரத்தில் முதல்வரின் உதவியாளரிடம் இருந்து பொன்முடிக்கு போன் வந்துள்ளது. அதையடுத்து ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார் பொன்முடி.
அங்கே முதல்வரை பார்த்ததும் கண் கலங்கிவிட்டார் பொன்முடி. ‘நான் இதை எதிர்பார்க்கவே இல்லங்க. வக்கீல்களும் அக்யூட்டல் ஆகிடுவோம்னுதான் சொன்னாங்க. அதனாலதான் நானே நேத்து(டிசம்பர் 19) ஊர்ல பல நிகழ்ச்சிகள்ல இருந்தேன். ஆனா இப்படி ஆகிடிச்சு’ என்று சொல்லியிருக்கிறார் பொன்முடி.
அதற்கு முதல்வர் ஸ்டாலின், ‘நானும் அப்டித்தான் நெனைச்சேன். கவலைப்படாதீங்க. தைரியமா இருங்க. அவங்ககிட்டையும் தைரியமா இருக்க சொல்லுங்க.
சுப்ரீம் கோர்ட்ல நமக்கு சாதகமான தீர்ப்பு வரும். நானும் டெல்லில இருந்தே வழக்கறிஞர்கள்கிட்ட எல்லாம் பேசியிருக்கேன். தம்பிகிட்டயும் (கௌதக சிகாமணி எம்பி) பேசினேன். தைரியமா இருங்க” என்று ஆறுதல் சொல்லி அனுப்பியிருக்கிறார் முதலமைச்சர்.
நேற்று இந்த சந்திப்பு நடந்த நிலையில், இன்று பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை, 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
பொன்முடிக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட அதேநேரம் வெள்ள பாதிப்புகளை பார்வையிட முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடி வழக்கில் தாமதமான தீர்ப்பு: அண்ணாமலை கருத்து!
பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை, 50 லட்சம் அபராதம்! உயர்நீதிமன்றம் உத்தரவு!
Ponmudi met Chief Minister Stalin