தமிழ்நாடு உயர்க்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான 9 இடங்களில் நேற்று (ஜூலை 17) அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையின் போது ரூ.70 லட்சம் மற்றும் ரூ. 10 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அமைச்சர் பொன்முடி விசாரணைக்காக சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டப்பிரிவு 50ன் நடைமுறைப்படி அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
அதிகாலை 3.30 மணி வரை பொன்முடியிடம் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை அதிகாரிகள், இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு ஆஜராக சொல்லி சம்மன் கொடுத்து அனுப்பினர்.
பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான கவுதம் சிகாமணிக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3.25 மணியளவில் சைதாபேட்டையில் உள்ள இல்லத்திலிருந்து பொன்முடியும், கவுதம் சிகாமணியும் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இதனிடையே அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சி.வி.கணேசன், எம்.பி.க்கள் ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா உள்ளிட்டோர் பொன்முடி வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துவிட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவியில் ஆர்வம் இல்லை” – மல்லிகார்ஜூன கார்கே